வர்த்தக நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக ட்ரம்ப் அரசு மேல்முறையீடு செய்யவிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
உலகளாவிய நாடுகள் மீது அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் விதித்த 10 சதவிகித வரியை சட்டவிரோதமானவை என அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இது, ட்ரம்ப்வுக்கு மேலும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.
அதிபராகப் பொறுப்பேற்றது முதல், ‘அமெரிக்காவுக்கே முன்னுரிமை’ என்ற கொள்கையுடன் செயல்பட்டுவரும் ட்ரம்ப், வர்த்தகரீதியாக அமெரிக்காவால் பல நாடுகள் ஆதாயம் அடைந்து வருவதாகவும், அதே அளவு பலன் அவர்களால் தங்கள் நாட்டிற்குக் கிடைக்கவில்லை என்றும் கூறி வந்தார். இதையடுத்து இந்தியா, கனடா, சீனா, மெக்சிகோ என அனைத்து நாடுகளிலிருந்து வரும் பொருட்களுக்கும் வரிகளை அறிவித்தார். இதில் 10% முதல் 50% வரை வரிகள் விதிக்கப்பட்டன. மேலும், பிற நாடுகள் தங்களுக்கு எந்த விகிதத்தில் வரி விதிக்கின்றனவோ, அதே விகிதத்தில் அந்த நாடுகளின் பொருள்கள் மீதும் (பரஸ்பர) வரி விதித்தார்.

அந்த வகையில் இந்தியாவுக்கும் 50% வரி விதிக்கப்பட்டு, பின்னர் வர்த்தக ஒப்பந்தத்திற்குப் பிறகு 18% ஆகக் குறைக்கப்பட்டது. இதற்கிடையே, ட்ரம்பின் வரிவிதிப்பு தொடர்பாக சிறு வணிகர்கள் மற்றும் சில மாகாணங்கள் சார்பில் தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த அமெரிக்க உச்ச நீதிமன்றம், நாடுகளின் மீதான அதிபர் ட்ரம்பின் வரி விதிப்பு செல்லாது எனும் உத்தரவை பிறப்பித்தது.
நாடாளுமன்றத்தின் பெரும்பான்மை ஆதரவுடன் மேற்கொள்ளப்பட வேண்டிய வரி விதிப்பை, தனி மனிதராக ட்ரம்ப் செய்துள்ளார் என கூறிய நீதிமன்றம், அவர் கூட்டாட்சி விதிகளை மீறியதாகவும், அதிபருக்கான அதிகாரத்தை மீறிச் செயல்பட்டதாகவும் சாடியது. அவசரகால அதிகாரச் சட்டம் வர்த்தகத்தை ஒழுங்குமுறைப்படுத்தும் அதிகாரத்தை மட்டுமே அதிபருக்கு அளிப்பதாகவும், புதிய வரிகளை விதிக்க அனுமதி அளிக்கவில்லை என்றும் நீதிபதிகள் சுட்டிக்காட்டினர். அதேநேரத்தில், அமெரிக்க உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு அந்நாட்டு அதிபர் டொனால்டு ட்ரம்ப் கடும் அதிருப்தி தெரிவித்தார். நாட்டின் பொருளாதாரப் பாதுகாப்பில் நீதிமன்றம் தலையிடுவது முறையல்ல என்று கூறிய ட்ரம்ப், வரிவிதிப்பு நடவடிக்கைகளை நிறுத்தப் போவதில்லை எனச் சூளுரைத்தார். மேலும், மாற்றுச் சட்டங்களைப் பயன்படுத்தி 10 சதவீத உலகளாவிய வரி விதிக்கப்படும் என தெரிவித்திருந்தார். இந்த நிலையில், மீண்டும் உலக நாடுகள் மீதான ட்ரம்ப்பின் வரிவிதிப்பை சட்டவிரோதமானவை என அமெரிக்க வர்த்தக நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இருப்பினும், வர்த்தக நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக ட்ரம்ப் அரசு மேல்முறையீடு செய்யவிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த மேல்முறையீடு முதலில் வாஷிங்டனில் உள்ள ஃபெடரல் சர்க்யூட்டிற்கான அமெரிக்க மேல்முறையீட்டு நீதிமன்றத்திற்குச் செல்லும், பின்னர் அது உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்படும்.
