ஆளுநர் தடுப்பது குதிரை பேரத்தையா? விஜய் பதவியேற்பையா?… கைக்கொடுக்குமா எடியூரப்பா வழக்கின் தீர்ப்பு? விவரத்தை கீழே காணலாம்..
Summary
1994 பொம்மை வழக்கு, 2018 கர்நாடக எடியூரப்பா தீர்ப்பு போன்ற முன்னுதாரணங்களை முன்வைத்து, ஆளுநர் முன்கூட்டியே பெரும்பான்மையை நிரூபிக்கச் சொல்ல முடியாது என வல்லுநர்கள் வாதிடுகின்றனர். ஆனால் 15 நாள் அவகாசம் குதிரை பேரத்துக்கு வழிவகுக்கும் என ஆளுநர் தரப்பு கூற, எதிர்க்கட்சிகள் நீதிமன்றத்தை நாடினால் உடனடி பெரும்பான்மை சோதனைக்கு உத்தரவு வரலாம் என அரசியல் வட்டாரங்கள் கணிக்கின்றன.
108 தொகுதிகள் என்ற தனிபெரும் வெற்றியை தமிழக வெற்றிக் கழகம் பதிவு செய்த பிறகும் தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் தற்போது வரை தவெக தலைவர் விஜய்யை பதவியேற்க அழைப்புவிடுக்காமல் இருப்பது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் பதவியேற்ற பிறகு பெரும்பான்மையை விஜய் நிரூபிப்பதாக தெரிவித்துள்ளார் என தகவல்கள் வெளியாகிய நிலையில், யார் பெரும்பான்மையுடன் வந்தாலும் பதவியேற்பு நடத்த தாயார் என கருத்து தெரிவித்துள்ளது பரபரப்புகளை அதிகரித்துள்ளது.

B S Yediyurappa & Vajubhai Vala
ஆளுநரிடம் தனிபெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய கட்டாயமில்லை என 1994 எஸ்.ஆர். பொம்மை வழக்கின் தீர்ப்பை மேற்கொள்காட்டி அரசியல் வல்லுநர்கள் கருத்துகள் தெரிவித்து வரும் சூழலில், ஆட்சியமைத்த பிறகு பெரும்பான்மையை நிரூபிக்க வழங்கப்படும் 15 நாள் கால அவகாசத்தில் எதிர்க்கட்சி எம்.எல்.ஏக்களை விலை பேசும் ‘குதிரை பேரத்திற்கு’ வழிவகுக்கும் வாய்ப்புள்ளதால் தனிபெரும்பான்மையை கோருவதாக ஆளுநர் தரப்பில் சொல்லப்படுகிறது.
ஆனால், அதேசமயம் இந்த பெரும்பான்மையை நிரூபிப்பதும் சட்டமன்றமும் நீதிமன்றமும்தான் முடிவு செய்யவேண்டும் என எடியூரப்பா வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பை மேற்கொள் காட்டி வாதிடப்படுகிறது. 2018ம் ஆண்டு நடந்த கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் எடியூரப்பா 104 இடங்களில் வெற்றி பெற்றிருந்தார். ஆனால் பெரும்பான்மைக்கு 112 இடங்கள் தேவையென்ற சூழலில் 8 இடங்கள் குறைவாக இருந்ததாலும் தனிபெரும் வெற்றியை பதிவுசெய்த கட்சியாக ஆளுநர் எடியூரப்பாவை ஆட்சி அமைக்க அழைத்து, பெரும்பான்மையை நிரூபிக்க 15 நாட்கள் கால அவகாசமும் வழங்கினார்.

Shivakumar & HD Kumaraswamy
ஆனால், காங்கிரஸ் – ஜேடிஎஸ் கூட்டணி இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அவசர மனுத் தாக்கல் செய்தது. அதன் எதிரொலியே வழக்கை விசாரித்த நீதிபதி ஏ.கே.சிக்ரி தலைமையிலான அமர்வு, ஜனநாயகப் படுகொலையான குதிரைப் பேரத்தைத் தடுக்க உடனடியாகப் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட்டது. இதனால் 15 நாள் அவகாசம் வெறும் 24 மணிநேரமாகக் குறைக்கப்பட்டது.
அதை போன்றே தற்போது விஜய் பெரும்பான்மையை நிரூபிக்கவேண்டும் என எதிர்க்கட்சிகள் நீதிமன்றத்தை நாடும்பட்சத்தில் எடியூரப்பா வழக்கில் வழங்கிய அதே தீர்ப்பை நீதிமன்றம் வழங்க வாய்ப்புள்ளது என கருத்துகள் முன்வைக்கப்படுகிறது.

Tamilnadu Governor – Vijay ANI
ஆனால், பொறுப்பு ஆளுநர் தனிபெரும்பான்மையை முன்பே முடிவுசெய்ய வேண்டும் என்பது அரசியலமைப்பிற்கு முற்றிலும் எதிரானது என கருத்துகளும் வலுசேர்கிறது. ஆளுநரின் இத்தகைய நடவடிக்கையை எதிர்த்து விஜய் மற்றும் தவெகவினர் தற்போது வரை கடைபித்து வரும் மௌனம் கலைக்கப்படுவதே தவெகவின் தரப்பின் குரல் என்ன என்பது தெரியவரும்.
