எல்.பி.ஜி தட்டுப்பாடு காரணமாக மக்கள் மின்சார அடுப்புகளை பயன்படுத்த வேண்டும் என மத்திய அரசுஅறிவுறுத்தியுள்ளது..
Summary
மத்திய அரசு எல்.பி.ஜி தட்டுப்பாட்டை சமாளிக்க மின்சார அடுப்புகளைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தியுள்ளது. கத்தாரில் ஈரான் தாக்குதலால் எரிபொருள் உற்பத்தி பாதிக்கப்பட்டதால், இந்தியா எரிவாயு இறக்குமதியில் சிக்கல்களை எதிர்கொண்டுள்ளது. பொதுமக்கள் பி.என்.ஜி மற்றும் மின்சார அடுப்புகளை மாற்றாக பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
அமெரிக்கா-இஸ்ரேல், ஈரான் நாடுகளுக்கு இடையேயான போர் முடிவுக்கு வந்துவிடும், உலகநாடுகளின் எரிபொருள் பற்றாக்குறை விரைவில் சரிசெய்யப்படும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் 3 வாரங்களை கடந்து நடந்துவரும் இப்போர் மேலும் தீவிரமடைந்துவருகிறது.

கத்தார் எரிசக்தி நிலையம்
கடந்த வாரத்தில் கத்தாரில் உள்ள உலகின் மிகப்பெரிய எரிசக்தி மையத்தை (Ras Laffan) ஈரான் தாக்கிய நிலையில், எரிபொருள் உற்பத்தி பெரிதளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலால் கத்தாரின் ஒட்டுமொத்த எல்.என்.ஜி உற்பத்தித் திறனில் 17 விழுக்காடு முற்றிலுமாக அழிந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ஆண்டுக்கு சுமார் 20 பில்லியன் டாலர் வருவாய் இழப்பு ஏற்படும் என்றும், சேதமடைந்த கட்டமைப்புகளைச் சீரமைக்க 3 முதல் 5 ஆண்டுகள் வரை ஆகும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியா தனது எரிவாயு தேவையில் 50 சதவீதம் கத்தாரிலிருந்தே இறக்குமதி செய்வதால் எரிபொருள் கிடைப்பதில் பெரிய தாக்கத்தை இந்தியா எதிர்கொண்டுள்ளது.
இந்தசூழலில் எல்.பி.ஜி. இறக்குமதியில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால், பொதுமக்கள் சமையல் எரிவாயுவுக்கு மாற்றாக பி.என்.ஜி.மற்றும் மின்சார அடுப்புகளைப் பயன்படுத்துமாறு மத்திய பெட்ரோலிய அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

சிலிண்டர் தட்டுப்பாடு
நாட்டில் பெட்ரோல், டீசல் மற்றும் எல்பிஜி கிடைப்பதை உறுதி செய்ய மத்திய அரசுஅனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளது. போலியான தகவல்களை நம்பி பெட்ரோல், டீசல் ஆகியவற்றை அதிக அளவில் வாங்கி சேமித்துக் கொள்வதையும், எல்.பி.ஜி முன்பதிவு செய்வதையும் தவிர்க்கவேண்டும் எனவும் மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
