பாலிவுட்டில் சர்ச்சைக்குப் பெயர் போன இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி. இவர் அடுத்த படமாக `ஆப்ரேஷன் சிந்தூர்’ சம்பவத்தை மையமாக வைத்து அவருடைய அடுத்த படத்தை எடுக்க உள்ளதாக அறிவித்துள்ளார்.
Summary
பாலிவுட் இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி ‘ஆப்ரேஷன் சிந்தூர்’ படத்தை இயக்க உள்ளார். இந்திய ராணுவத்தின் பாகிஸ்தான் மீது நடத்திய தாக்குதலை மையமாகக் கொண்டு உருவாகும் இந்த படம், உண்மைகளை வெளிப்படுத்தும் முயற்சியாகும். இது சலசலப்பை உருவாக்கும் நோக்கமல்ல, மாறாக உண்மைகளை தெளிவாக வெளிப்படுத்தும் சினிமா அனுபவமாக இருக்கும் என அவர் கூறியுள்ளார்.
பாலிவுட்டில் சர்ச்சைக்குப் பெயர் போன இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி. இப்போது இவர் அடுத்த படமாக ‘Operation Sindoor’-ஐ இயக்க உள்ளதாக அறிவித்துள்ளார். இவர் 2005லிருந்து படங்கள் இயக்கி வந்தாலும் 2022ல் இவர் இயக்கிய ‘The Kashmir Files’ பெரிய அளவில் பேசு பொருளானது. அதில் சொல்லப்பட்ட பல கருத்துக்களுக்கு எதிர்ப்பு கிளம்பியது. ஆனாலும் படத்திற்கு வரவேற்பு கிடைத்து ஹிட்டும் ஆனது. அதற்கடுத்து ‘The Vaccine War’ மற்றும் `The Bengal Files’ ஆகிய படங்களை இயக்கினார், அது பெரிய அளவில் கவனிக்கப்படாத தோல்விப் படங்களாக அமைந்தன.
இப்போது அவர் `ஆப்ரேஷன் சிந்தூர்’ சம்பவத்தை மையமாக வைத்து அவருடைய அடுத்த படத்தை எடுக்க உள்ளதாக அறிவித்துள்ளார். இந்திய ராணுவம், பாகிஸ்தான் மீது நடத்திய தாக்குதல் நடவடிக்கையை மையப்படுத்தி, லெப்டினன்ட் ஜெனரல் கே.ஜே.எஸ். ‘டைனி’ தில்லோன் எழுதிய ‘Operation Sindoor: The Untold Story of India’s Deep Strikes Inside Pakistan’ என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகவிருக்கிறது. ‘T-சீரீஸ்’ நிறுவனம் இந்தப் படத்தை தயாரிக்கிறது.
இத்திரைப்படம் பற்றி தயாரிப்பாளர் புஷன் குமார் கூறுகையில், “சில கதைகளை நாம் தேர்ந்தெடுப்பதில்லை, அவை நம்மைத் தேர்ந்தெடுக்கின்றன. ஆப்ரேஷன் சிந்தூர் அத்தகைய ஒரு கதை. நேர்மை மற்றும் தைரியத்துடன் சொல்லப்பட வேண்டிய கதை இது. இது வெறும் திரைப்படம் அல்ல. இது ஒரு வெளிப்பாடு. ஒரு நாடு இத்தகைய பெரிய நிகழ்வுகளைச் சந்திக்கும் போது, அவற்றை உண்மையாக ஆவணப்படுத்துவது முக்கியம்.” எனக் கூறியிருக்கிறார்.
இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி, “இது வெறும் திரைப்படம் அல்ல. ஆப்ரேஷன் சிந்தூர் மூலம் இந்தியா பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு பழி வாங்கியதோடு மட்டுமல்லாமல், பாகிஸ்தானைத் தண்டித்ததோடு, நவீன போரில் தன் வலிமையை நிரூபித்தது. என்ன நடந்தது என்பதை மட்டுமல்லாமல், அது எப்படி, ஏன் நடந்தது என்பதையும் புரிந்துகொள்வதற்காக, இந்திய ஆயுதப் படைகளின் பல்வேறு பிரிவுகளுடன் இணைந்து நாங்கள் விரிவான கள ஆராய்ச்சியை நடத்தியுள்ளோம். பொதுவெளியில் கிடைக்கும் தகவல்களை விட மிகவும் சிக்கலான, மிகவும் துல்லியமான, மற்றும் மிகவும் கலக்கத்தை ஏற்படுத்தும் ஒரு யதார்த்தம் இதன் மூலம் வெளிப்படுகிறது.
தைரியம், தொழில்முறைத் திறன் மற்றும் வியூகத் தெளிவு ஆகியவற்றை இந்தக் கதை மூலம் பார்வையாளர்களுக்கு நம்பகத்தன்மையுடன் கொண்டு சேர்ப்பதும், அதே சமயம் அதனை இருக்கையின் நுனியில் அமர வைக்கும் ஒரு சினிமா அனுபவமாக வழங்குவதுமே எனது முயற்சி. எனது நோக்கம் சலசலப்பை உருவாக்குவது அல்ல, மாறாக உண்மைகளின் அடிப்படையிலும், தெளிவின் அடிப்படையிலும், சினிமாவின் மாயாஜாலத்தின் மூலமும் அதை எதிர்கொள்வதே ஆகும்.” எனத் தெரிவித்துள்ளார்.
