கருங்கடல் அருகே துருக்கி எண்ணெய் கப்பல்மீது ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. திடிரென நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் 10 லட்சம் பேரல் கச்சா எண்ணெயுடன் கப்பல்கள் தத்தளித்து கொண்டிருக்கின்றன. இந்த தாக்குதலுக்கு தற்போது வரை எந்த நாடும் பொறுப்பேற்கவில்லை.
Summary
துருக்கியின் போஸ்பரஸ் ஜலசந்தியில் ‘எம்.டி. அல்துரா’ எண்ணெய் கப்பல் மீது ட்ரோன் மற்றும் ஆளில்லா நீர்மூழ்கி ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. கப்பலின் கேபின் மற்றும் எஞ்சின் அறை சேதமடைந்த நிலையில், 27 ஊழியர்கள் பாதுகாப்பாக உள்ளனர். இந்த தாக்குதல், கருங்கடல் பகுதியில் எரிசக்தி வழித்தடங்கள் மீதான தாக்குதல்களின் தொடர்ச்சியாகக் கருதப்படுகிறது.
துருக்கியின் இஸ்தான்புல் நகருக்கு அருகே உள்ள போஸ்பரஸ் ஜலசந்தி பகுதியில், ஒரு மில்லியன் பேரல் கச்சா எண்ணெயைச் சுமந்து வந்த ‘எம்.டி. அல்துரா’ என்ற துருக்கி நாட்டு எண்ணெய் கப்பல் மீது ட்ரோன் மட்டுமின்றி ஆளில்லா நீர்மூழ்கி ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

நேற்று காலை இஸ்தான்புல் கடற்கரையிலிருந்து சுமார் 28 கி.மீ தொலைவில் இச்சம்பவம் அரங்கேறியுள்ளது.. இந்த தாக்குதலில் கப்பலின் கேபின் மற்றும் எஞ்சின் அறை கடும் சேதம் அடைந்துள்ளது. அதுமட்டுமின்றி எஞ்சின் அறையில் ஓட்டை விழுந்து தண்ணீர் புகுந்ததால், கப்பல் தனது கட்டுப்பாட்டை இழந்து கடலில் தத்தளித்து கொண்டிருக்கிறது.
கப்பலில் இருந்த 27 துருக்கிய ஊழியர்களும் அதிர்ஷ்டவசமாக எவ்வித காயமுமின்றி பாதுகாப்பாக இருப்பதாகத் துருக்கி போக்குவரத்துத் துறை அமைச்சர் அப்துல்காதிர் உராலோக்லு தெரிவித்துள்ளார்.
இந்த கப்பல் ரஷ்யாவின் நோவோரோசிஸ்க் துறைமுகத்திலிருந்து 10 லட்சம் டன் கச்சா எண்ணெயுடன் வந்து கொண்டிருந்தது. கப்பல் முழுமையாக எண்ணெயால் நிரப்பப்பட்டுள்ளதால், கசிவு ஏற்பட்டால் அது போஸ்பரஸ் ஜலசந்தி மற்றும் கருங்கடல் பகுதியில் பெரும் சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தும் என அஞ்சப்படுகிறது.
துருக்கி கடலோரப் பாதுகாப்புப் படையினர் மற்றும் அவசர கால மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். தற்போது மூன்று ராணுவக் கப்பல்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளன.

இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்த நாடும் பொறுப்பேற்கவில்லை. இருப்பினும், கடந்த சில வாரங்களாக உக்ரைன் – ரஷ்யா போர் சூழலில் கருங்கடல் பகுதியில் உள்ள எரிசக்தி வழித்தடங்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்துள்ளன.
இந்தத் தாக்குதல் உள்நோக்கத்துடன், கப்பலின் எஞ்சினைச் செயலிழக்கச் செய்வதற்காகவே நடத்தப்பட்டுள்ளதாகத் துருக்கி அதிகாரிகள் கருதுகின்றனர். உலகளாவிய எரிசக்தி சந்தையில் ஏற்கனவே விலை ஏற்றம் நிலவி வரும் சூழலில், மிக முக்கியமான போக்குவரத்துப் பாதையான போஸ்பரஸ் அருகே நடந்த இந்தத் தாக்குதல் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
