அரசியல் புரிதலும் வரலாறும் இல்லாமல் அதிமுக தலைவர்களை இரவல் பெற்று ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டு செயல்படுவதாக தவெக தலைவர் விஜயை அதிமுக ஐடி விங் கடுமையாக விமர்சித்துள்ளது.
தமிழ்நாட்டில் இன்னும் ஒருசில மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து கட்சிகள் கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீடுகள் பற்றிய பேச்சுவார்த்தையிலும் பிரசாரங்களிலும் ஈடுபட்டு வருகின்றன. அந்தவகையில் தவெகவின் தலைவர் விஜயும் நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தை நடத்தி வருகிறார். சேலத்தில் நேற்று நடைபெற்ற நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய அவர், ”அனுபவம் இல்லாதவர்கள் என்று தவெகவை விமர்சிக்கிறார்கள். உங்கள் அனுபவம் என்ன வென்று சொல்லட்டுமா? கட்சி தொடங்கிய அண்ணா, எம்.ஜி.ஆரை மறந்தது. எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவை மறந்ததுதான் உங்கள் அனுபவம். ஆமாம், எங்களுக்கு அனுபவம் இல்லைதான். கொள்ளை அடிக்க அனுபவம் இல்லை. சுட்டுப்போட்டாலும் அது வராது” என அதிமுக, திமுக கட்சிகளைக் கடுமையாகச் சாடினார்.
விஜய்
இந்த நிலையில், அரசியல் புரிதலும் வரலாறும் இல்லாமல் அதிமுக தலைவர்களை இரவல் பெற்று ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டு செயல்படுவதாக தவெக தலைவர் விஜயை அதிமுக ஐடி விங் கடுமையாக விமர்சித்துள்ளது. மற்ற கட்சிகளில் இருந்து தூக்கி எறியப்பட்டவர்களை சேர்த்துக்கொண்டு கட்சி என்ற பெயரில் வாட்ஸப் குழுவை நடத்திக்கொண்டிருப்பதாக விமர்சித்ததோடு, திரைத்துறையில் முதல் நாள் முதல் காட்சிக்கான டிக்கெட்டை இரண்டாயிரம் ரூபாய்க்கு விற்றதெல்லாம் கொள்ளை இல்லையா என கேள்வி எழுப்பியுள்ளது. திமுக எவற்றில் எல்லாம் அவுட் ஆஃப் கண்ட்ரோலாக உள்ளது என்பது குறித்த தங்களது சமூக வலைதளப் பதிவை அடிமாறாமல் விஜய் ஒப்பித்துள்ளதாகவும் அடுத்தவர் குதிரையில் சவாரி செய்யும் அவர் எப்படி ஒரிஜினல் ஆவார் என்றும் அதிமுக ஐடி விங் கேள்வி எழுப்பியுள்ளது.
