மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரிக்கும் நிலையில் 1000 பாராசூட் வீரர்களை களமிறக்கியிருக்கிறார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.
Summary
மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரிக்கும் நிலையில், அமெரிக்காவின் புகழ்பெற்ற 82-வது வான்வழிப் படை வீரர்கள் ஆயிரக்கணக்கில் அங்கு குவிக்கப்படுகின்றனர். ஃபோர்ட் லிபர்ட்டியிலிருந்து கிளம்பிய பாராசூட் படையினர், ஏற்கனவே உள்ள கடற்படை, சிறப்பு அதிரடிப்படையுடன் இணைந்து ஈரானைச் சூழ்ந்த இராணுவ வளையத்தை வலுப்படுத்துகின்றனர்.
மத்திய கிழக்கில் போர் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், அமெரிக்க ராணுவத்தின் மிகவும் புகழ்பெற்ற 82-வது வான்வழிப் படையைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான வீரர்கள் அங்கு வந்து சேரத் தொடங்கியுள்ளனர். வட கரோலினாவில் உள்ள ஃபோர்ட் லிபர்ட்டி (Fort Liberty) தளத்திலிருந்து கிளம்பிய இந்தப் பாராசூட் வீரர்கள், மத்திய கிழக்குப் பகுதிக்கு வந்து சேர்ந்துள்ளதாக இரண்டு அமெரிக்க அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். கடந்த மார்ச் 18-ஆம் தேதியே கூடுதல் படைகளை அனுப்புவது குறித்து ட்ரம்ப் நிர்வாகம் ஆலோசித்து வந்த நிலையில், தற்போது அந்தப் படைகள் நிலைநிறுத்தப்பட்டு வருகின்றன.

iran war
ஏற்கனவே அந்தப் பகுதியில் ஆயிரக்கணக்கான கடற்படை வீரர்கள் மற்றும் சிறப்பு அதிரடிப் படையினர் உள்ள நிலையில், கடந்த வார இறுதியில் மட்டும் சுமார் 2,500 கடற்படை வீரர்கள் அங்கு வந்து சேர்ந்துள்ளனர். தற்போது வந்துள்ள இந்தப் புதிய படையில், 82-வது வான்வழிப் பிரிவின் தலைமையக அதிகாரிகள், தளவாட மற்றும் ஆதரவுக் குழுக்கள் மற்றும் ஒரு பிரிகேட் போர் குழு (Brigade Combat Team) ஆகியவை இடம்பெற்றுள்ளன.
ஈரானுக்குள் தரைப்படையை நேரடியாக இறக்கும் இறுதி முடிவு இன்னும் எடுக்கப்படவில்லை என்றாலும், எதிர்கால இராணுவ நடவடிக்கைகளுக்காகப் படைப் பலத்தை அமெரிக்கா தற்போது தயார் நிலையில் வைத்துள்ளது. குறிப்பாக, ஈரானின் 90 சதவீத எண்ணெய் ஏற்றுமதி நடைபெறும் முக்கிய இடமான கார்க் தீவை (Kharg Island) கைப்பற்றுவது குறித்து ட்ரம்ப் நிர்வாகம் தீவிரமாக விவாதித்து வருகிறது. இஃது ஓர் அதிக ஆபத்து நிறைந்த முயற்சி என்றாலும், ஈரானின் பொருளாதாரத்தை முடக்க இது உதவும் என அமெரிக்கா கருதுகிறது.

Kharg Island
அதேபோல், நிலத்தடியில் ஆழமாக மறைத்து வைக்கப்பட்டுள்ள செறிவூட்டப்பட்ட யுரேனியம் போன்ற பொருட்களைக் கைப்பற்ற தரைப்படையை உள்ளே அனுப்புவது குறித்தும், எண்ணெய்க் கப்பல்கள் செல்லும் முக்கிய கடல் பாதையான ஹார்முஸ் ஜலசந்தி மற்றும் ஈரானின் கடற்கரைப் பகுதிகளைப் பாதுகாக்கும் பணிகளில் வீரர்களைப் பயன்படுத்துவது குறித்தும் அமெரிக்க நிர்வாகம் ஆலோசித்து வருகிறது.
கடந்த பிப்ரவரி 28 அன்று தொடங்கப்பட்ட Operation Epic Fury மூலம் இதுவரை அமெரிக்கா 11,000-க்கும் மேற்பட்ட இலக்குகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. இந்தப் போரில் இதுவரை 13 அமெரிக்க வீரர்கள் உயிரிழந்துள்ளனர் மற்றும் 300-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

Ships waiting at The Strait of Hormuz
அதிபர் ட்ரம்ப் இதுகுறித்துப் பேசுகையில், தற்போது ஒரு இணக்கமான ஆட்சிக்குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், ஆனால் ஈரான் தனது பிடிவாதத்தைக் கைவிட்டு ஹார்முஸ் ஜலசந்தியைத் திறக்காவிட்டால், அந்த நாட்டின் எண்ணெய்க் கிணறுகள் மற்றும் மின் நிலையங்கள் மீது கடும் தாக்குதல் நடத்தப்படும் என்றும் மீண்டும் எச்சரித்துள்ளார். புதிய போர்களில் அமெரிக்காவை ஈடுபடுத்த மாட்டேன் என்று தேர்தல் வாக்குறுதி அளித்திருந்த அதிபர் ட்ரம்பிற்கு, இப்போது தரைப்படையை ஈரானுக்கு அருகில் நிலைநிறுத்துவது மிகப்பெரிய அரசியல் சவாலாகப் பார்க்கப்படுகிறது.
