2026 மகளிர் பிரீமியர் லீக்கில் டெல்லி அணி, குஜராத்தை வீழ்த்தி, 4வது முறையாக இறுதிப்போட்டிக்குள் அடியெடுத்து வைத்துள்ளது.
2026 மகளிர் பிரீமியர் லீக்கில் டெல்லி அணி, குஜராத்தை வீழ்த்தி, 4வது முறையாக இறுதிப்போட்டிக்குள் அடியெடுத்து வைத்துள்ளது. நாளையப் போட்டியில், ஜெமிமா ரோட்ரிக்ஸ் அவரது நெருங்கிய தோழியான ஸ்மிருதி மந்தனாவின் பெங்களூருவை எதிர்கொள்ள இருக்கிறார்.
2026 மகளிர் பிரீமியர் லீக் தொடரானது பரபரப்பான இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. 4வது WPL கோப்பைக்காக மும்பை இந்தியன்ஸ், ஆர்சிபி, உபி வாரியர்ஸ், டெல்லி கேபிடல்ஸ், குஜராத் ஜியண்ட்ஸ் முதலிய 5 அணிகள் பலப்பரீட்சை நடத்திய நிலையில், முதல் 5 போட்டிகளிலும் ஒரு தோல்விகூட இல்லாமல் வெற்றிபெற்ற ஆர்சிபி அணி முதல் அணியாக இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்று அசத்தியது. இந்நிலையில் இறுதிப்போட்டிக்கு செல்லவிருக்கும் 2வது அணி யார் என்ற கேள்விக்கு விடை தரும் எலிமினேட்டர் போட்டி குஜராத் ஜெயண்ட்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே நேற்று நடைபெற்றது. இதில், டாஸ் வென்ற டெல்லி கேபிடல்ஸ் அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த குஜராத் ஜெயண்ட்ஸ் அணி 168 ரன்கள் எடுத்தது. இறுதிவரை ஆட்டமிழக்காமல் விளையாடிய பெத் மூனி 62 ரன்கள் எடுத்தார்.

delhi team
4வது முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதிபெற வேண்டுமானால் டெல்லி அணி 169 ரன்கள் இலக்கை எட்டவேண்டும் என்ற நிலையில், களமிறங்கிய அவ்வணியில் லிஜலி லீ (43 ரன்கள்), ஷபாலி வர்மா (31 ரன்கள்), லாரா வால்வர்ட் (32* ரன்கள்), கேப்டன் ஜெமிமா ரோட்ரிக்ஸ் (41 ரன்கள்) ஆகியோரின் சிறப்பான பங்களிப்பால் 15.4 ஓவர்களிலேயே வெற்றி இலக்கை எட்டியது. தவிர இறுதிப்போட்டிக்கும் தகுதிபெற்றது. இவ்விரு அணிகளுக்கும் இடையிலான இறுதிப்போட்டி நாளை இரவு நடைபெற இருக்கிறது. பெங்களூரு அணியின் கேப்டன் ஸ்மிருதி மந்தனாவும், இந்த முறை டெல்லி அணியின் கேப்டனாக பதவியேற்றிருக்கும் ஜெமிமாவும் இணைபிரியாத தோழிகளாக வலம் வருகின்றனர். இதையடுத்து நாளைய போட்டி ரசிகர்களிடம் எதிர்பார்ப்பைக் கூட்டியுள்ளது. முதல் முறையாக டெல்லி அணி கோப்பையை ஏந்துமா அல்லது மீண்டும் பெங்களூரே வென்று வாகை சூடுமா என நாளை தெரிந்துவிடும்.
