இந்தி எதிர்ப்பு போரட்டத்தில் சிவா திலீபன் உயிரிழந்த நிலையில் இனி ஒரு உயிரும் போக வேண்டாம் என முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
Summar
இந்தி ஆதிக்க எதிர்ப்பு போராட்டத்தில் ரயில்முன் பாய்ந்த சிவா திலீபன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து, இனி உயிர்த்தியாகம் வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டார். தமிழ் உணர்வாளர்கள் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இந்தி ஆதிக்க எதிர்ப்பு போராட்டத்தின் போது ரயில் முன்பாய்ந்த மே 17 இயக்க பொறுப்பாளர் சிவா திலீபன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கடந்த மார்ச் 11ஆம் தேதி சென்னை பார்க் ரயில் நிலையத்தில் நடைபெற்ற இந்தி எழுத்துக்களை அழிக்கும் போராட்டத்தில் இந்திக்கு எதிராக கோஷங்களை எழுப்பியபடி ரயில்முன் பாய்ந்தார்.
ஒரு வார காலமாக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்றுவந்த அவர் சிகிச்சை பலனிறி உயிரிழந்தார். அவரது மறைவுக்கு தமிழ் உணர்வாளர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
முதல்வர் ஸ்டாலின் வேதனை..
இந்தி ஆதிக்க எதிர்ப்பு போராட்டத்தின் போது ரயில்முன் பாய்ந்து சிவா திலீபன் உயிரிழந்த நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், “இனி ஒரு உயிரும் போக வேண்டாம்!
இந்தி எழுத்து அழிப்புப் போராட்டத்தின்போது உணர்ச்சிவயப்பட்டு இரயில் முன் பாய்ந்த சகோதரர் திரு. சிவா திலீபன் அவர்கள் தீவிர சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தது மனதைக் கனக்கச் செய்கிறது.
மொழிப்போரில் நாம் ஈந்த உயிர்ப்பலிகள் போதும்! இனி ஒரு உயிரும் போகக் கூடாது! தொழில்நுட்பத்தின் உதவியால் பல புதுமையான, அமைதியான, பெரும் வீச்சு கொண்ட போராட்ட வழிமுறைகளைப் பெற்றிருக்கிறோம்!
இந்தித் திணிப்பை நம் மதிநுட்பத்தாலும் மனவுறுதியாலும் தமிழ்ப்பற்றாலும்தான் வீழ்த்த வேண்டும்! இப்போரில் நம் உயிர் வீழக்கூடாது. நம்மைப் போன்ற தமிழ் மறவர்கள் வீழ்ந்துபோனால் தாய்த்தமிழ் எங்ஙனம் வாழும் எனச் சிந்தியுங்கள். நம் உணர்ச்சிகளைக் காட்ட வேறு வழிகள் உள்ளன, உயிர்த்தியாகம் வேண்டாம் என மன்றாடிக் கேட்டுக்கொள்கிறேன்.
சகோதரர் சிவா திலீபன் அவர்களை இழந்து வாடும் தோழர் திருமுருகன் காந்தி உள்ளிட்ட மே 17 இயக்கத்தினருக்கும் – தமிழுணர்வு கொண்ட அவரது இரண்டு மகள்கள் மற்றும் துணைவியார் உள்ளிட்ட குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் உரித்தாக்குகிறேன்” என பதிவிட்டுள்ளார்.
