மகப்பேறு இறப்பில் பூஜ்யம் விகிதத்தை எப்படி சாத்தியமாக்கினீர்கள் என்று ஆய்வுசெய்ய உத்தரபிரதேச சுகாதாரக் குழு ஒன்று தமிழ்நாடு வந்தது.
Summary
உத்தரபிரதேச மாநில குழுவினர், தமிழ்நாட்டின் சுகாதார திட்டங்களை ஆய்வு செய்ய வந்தனர். விருதுநகர் மாவட்டத்தில் பூஜ்ஜியம் மகப்பேறு இறப்பு விகிதத்தை எட்டிய சாதனையைப் பாராட்டி, அதனை உத்தரபிரதேசத்தில் செயல்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். முதல்வர் ஸ்டாலின், இந்த ஆரோக்கியமான கற்றல் முறையை வரவேற்று, திராவிட மாடலை இந்தியா பின்பற்ற வேண்டும் எனக் கூறினார்.
உத்தரப் பிரதேச மாநில உருமாற்ற ஆணையத்தின் (State Transformation Commission) தலைமைச் செயல் அதிகாரி தலைமையிலான உயர்மட்டக் குழுவினர், தமிழகத்தின் சுகாதாரக் கட்டமைப்பு மற்றும் சேவைகளை நேரில் ஆய்வு செய்வதற்காக இரண்டு நாள் பயணமாக (மார்ச் 18 மற்றும் 19) தமிழகம் வந்தனர்.

DMS Chennai
சென்னையில் ஆலோசனை பயணத்தின் முதல் நாளான மார்ச் 18 அன்று, சென்னை டி.எம்.எஸ் வளாகத்தில் உள்ள தேசிய நலவாழ்வு குழும அலுவலகத்தில் சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் இக்குழுவினர் ஆலோசனை நடத்தினர்.

மகப்பேறு கர்ப்பிணி
தமிழகத்தில் தற்போது நடைமுறையில் உள்ள மருத்துவக் கட்டமைப்பு வசதிகள் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கப்படும் சுகாதார சேவைகள் குறித்து இக்குழுவினருக்கு விரிவான விளக்கம் அளிக்கப்பட்டது.
பூஜ்ஜியம் மகப்பேறு இறப்பு குறித்து ஆலோசனை..
பயணத்தின் இரண்டாம் நாளான மார்ச் 19 அன்று, இக்குழுவினர் விருதுநகர் சுகாதார மாவட்டத்திற்குச் சென்றனர். கடந்த 2023 ஏப்ரல் முதல் 2024 மார்ச் வரையிலான காலகட்டத்தில், ‘பூஜ்ஜிய மகப்பேறு இறப்பு விகிதத்தை’ எட்டி விருதுநகர் மாவட்டம் சாதனை படைத்துள்ளது. இச்சாதனையைச் சாத்தியமாக்கிய வழிமுறைகளை ஆய்வு செய்வதே இக்குழுவின் முக்கிய நோக்கமாகும்.

கர்ப்பிணிடிவிட்டர்
மாவட்ட அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்ட இக்குழுவினர், அங்கு செயல்படுத்தப்படும் முன்னோடித் திட்டங்கள் குறித்துக் கேட்டறிந்தனர். அதனைத் தொடர்ந்து, அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளுக்குச் சென்று, அங்கு சிகிச்சை பெறும் தாய்மார்களிடம் வழங்கப்பட்ட மருத்துவச் சேவைகள் குறித்த கருத்துகளையும் கேட்டனர். மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாகத் திகழும் தமிழகத்தின் சுகாதாரத் திட்டங்களை, உத்தரப் பிரதேசத்திலும் செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை இக்குழுவினர் ஆராய்ந்தனர்
முதல்வர் ஸ்டாலின் பதிவு
மகப்பேறு இறப்பு நிகழாமல் இருப்பதை தடுக்க தமிழ்நாட்டு வழிமுறைகளை அறிய உத்தரபிரதேசம் பின்பற்றுவதை பாராட்டிய முதல்வர் ஸ்டாலின், “ஒருவரிடமிருந்து ஒருவர் கற்றுக்கொள்ளும் இந்த ஆரோக்கியமான போக்கு மென்மேலும் வளர வேண்டும் என விழைகிறேன். தமிழ்நாட்டுக்கு வந்துள்ள விருந்தினர்களை நம் மக்களின் சார்பாக அன்போடு வரவேற்கிறேன்.
மகப்பேறு இறப்பு விகிதம் குறைப்பதில் மட்டுமல்ல; மாநில சுயாட்சி, மொழிக்கொள்கை, சமூகநீதி ஆகியவற்றிலும் தமிழ்நாட்டின் திராவிட மாடலை நாடு முழுவதும் பின்பற்றப்பட்டால் இந்தியா இன்னும் விரைவாக வளர்வது உறுதி” என எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
