ஐபிஎல் 2026 தொடர் விரைவில் தொடங்க உள்ள நிலையில், அதற்குள் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி விற்பனை செய்யப்பட இருக்கிறது.
ஐபிஎல்லின் 10 அணிகளுள் ஒன்றான, ஆர்.சி.பி. விற்பனை செய்யப்பட இருக்கிறது. பெங்களூரு அணியை வாங்குவதற்கான போட்டியில் சுவீடன் நாட்டைச் சேர்ந்த தனியார் முதலீட்டு நிறுவனமான EQT தற்போது தீவிரமாக களமிறங்கியுள்ளது.
ஐபிஎல் 2026 19ஆவது சீசனுக்கான முதல் 20 நாட்களுக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு, மேற்கு வங்கம் உள்ளிட்ட 5 மாநில சட்டமன்றத் தேர்தல்களைக் கருத்தில் கொண்டு இந்த முதற்கட்ட அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, மார்ச் 28ஆம் தேதி முதல் போட்டி தொடங்குகிறது. முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் பெங்களூரு அணி, ஹைதராபாத் அணியை சின்னசாமி மைதானத்தில் சந்திக்கிறது. இந்த நிலையில், கடந்த ஆண்டு நிகழ்ந்த கூட்ட நெரிசல் சம்பவத்தையடுத்து, பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி விற்கப்பட இருப்பதாகத் தகவல் வெளியானது. அது, அதிகாரப்பூர்வமாகவும் உறுதிப்படுத்தப்பட்டது.

rcb
இங்கிலாந்தைச் சேர்ந்த முன்னணி மதுபான நிறுவனமான டியாஜியோ, யுனைடெட் ஸ்பிரிட்ஸ் லிமிடெட் (USL) மூலம் ஆர்சிபி அணியின் ஐபிஎல் (ஆண்கள்) மற்றும் டபிள்யூபிஎல் (பெண்கள்) அணிகளை நிர்வகித்து வருகிறது. அந்த அணி உரிமையாளர்களான UKவை தளமாகக் கொண்ட மதுபான நிறுவனமான டியாஜியோ, மார்ச் 31, 2026க்குள் தனது உரிமையை விற்கும் செயல்முறையைத் தொடங்கியுள்ளது.
அதன்படி, அணியின் மதிப்பு சுமார் $2பில்லியனாக (ரூ.17,762 கோடி) நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாகவும், ஆர்சிபி அணியை வாங்க உள்நாட்டில் 4 நிறுவனங்களும் வெளிநாடுகளில் 2 நிறுவனங்களும் ஆர்வம் காட்டுவதாகவும் தகவல் வெளியாகி இருந்தது. மேலும், ஆர்சிபி அணியை வாங்குவதற்கான இறுதி ஏலத்தை சமர்ப்பிக்க மார்ச் 16ஆம் தேதி கடைசி நாளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், பெங்களூரு அணியை வாங்குவதற்கான போட்டியில் சுவீடன் நாட்டைச் சேர்ந்த தனியார் முதலீட்டு நிறுவனமான EQT தற்போது தீவிரமாக களமிறங்கியுள்ளது.

RCB IPL Champion
இந்த நிறுவனம் பெங்களூரு அணிக்காக சுமார் 2 முதல் 2.1 பில்லியன் டாலர் (சுமார் 18,520 கோடி) மதிப்பிலான பிரம்மாண்டமான தொகையை இறுதி ஏலத்தில் வழங்க தயாராகி வருவதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்குமுன் லான்சர் கேபிடல் என்ற நிறுவனம் 1.8 பில்லியன் டாலர்களை வழங்க முன்வந்தது. அதைவிட மிக அதிக தொகைக்கு வாங்க EQT நிறுவனம் முன்வந்துள்ளது. ஐபிஎல் 2026 தொடர் விரைவில் தொடங்க உள்ள நிலையில், இந்த மெகா விற்பனை நடவடிக்கைகள் மார்ச் 31ஆம் தேதிக்குள் முழுமையாக முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
