போர் நிறுத்தம் தொடங்கி சில நாட்களே ஆன நிலையில், காஸாவில் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்கள் மீண்டும் தொடங்கியுள்ளன.
இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக இஸ்ரேல் – காஸா போரை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில், அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தனது 20 அம்ச அமைதித் திட்டத்தைப் பரிந்துரைத்தார். இஸ்ரேலிய பிணைக்கைதிகளை விடுவிப்பதும், இஸ்ரேலிய வீரர்களை ஓரளவு திரும்பப் பெறுவதும் பரிந்துரை விதிமுறைகளில் அடக்கமாகும். இப்பரிந்துரையின்படி இருதரப்பிலும் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டு போர் நிறுத்தம் ஏற்பட்டது. ஆனால், போர் நிறுத்தம் தொடங்கி சில நாட்களே ஆன நிலையில், காஸாவில் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்கள் மீண்டும் தொடங்கியுள்ளன. அமெரிக்கா மத்தியஸ்தம் செய்தும் இஸ்ரேல் அங்கு போர் தொடுக்க என்ன காரணம்? விரிவாக அலசுகிறது இந்தத் தொகுப்பு…
நடப்பு வார நிலவரப்படி, இறந்த பிணைக்கைதிகளின் 28 உடல்களில் 15 உடல்கள் மட்டுமே திருப்பி அனுப்பப்பட்டதாக CNN செய்தி வெளியிட்டுள்ளது. ஹமாஸ் இந்தச் செயல்முறையை தாமதப்படுத்தியது மட்டுமல்லாமல், ஒப்பந்தத்தின் விதிமுறைகளையும் பல வழிகளில் மீறியுள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. ஒப்பந்தத்தின்படி, வேறு ஒரு கொல்லப்பட்ட பணயக்கைதியின் உடலைத் தருவதற்குப் பதிலாக ஏற்கெனவே தரப்பட்ட ஒரு பணயக்கைதியின் உடற்பாகங்களை ஹமாஸ் மீண்டும் ஒப்படைத்துள்ளது.
மேலும், தெற்கு காஸாவில் இஸ்ரேல் படைகள் மீது ஹமாஸ் தாக்குதல் நடத்தியுள்ளது. தவிர, ஹமாஸ் அமைப்பினர் இரண்டு இஸ்ரேலிய வீரர்களைக் கொன்றதாகவும் கூறப்படுகிறது. இந்த இரண்டு விஷயங்களுமே இஸ்ரேலுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாகவே அதற்குப் பதிலடியாக, புதிய இராணுவ நடவடிக்கையை இஸ்ரேல் எடுத்திருப்பதாகக் கூறப்படுகிறது. அதற்காக, காஸா மீது கடுமையான தாக்குதல்களை நடத்த இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உத்தரவிட்டதையடுத்து, அங்கு குண்டுமழை பொழியத் தொடங்கியுள்ளது இஸ்ரேல் ராணுவம். இஸ்ரேலின் இந்த திடீர் போரால், ஹமாஸும் மற்றொரு பணயக்கைதியின் உடலை ஒப்படைக்கும் திட்டத்தை ஒத்திவைப்பதாக அறிவித்துள்ளது. இதனால், மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளது.

ஹமாஸ், ட்ரம்ப்
இவ்விவகாரம் கருத்து தெரிவித்த டொனால்டு ட்ரம்ப், “போர் நிறுத்த உறுதிமொழிகளை மீறினால் ஹமாஸ் மீது தாக்குதல் நடத்துவது நியாயமானதே ஆகும். அதற்காக, இஸ்ரேலுக்கு அமெரிக்கா ஆதரவாக இருக்கும். அதன் நட்பு நாடுகளும் விரைந்து உதவி செய்யும். ஹமாஸ் விதிமுறைப்படி நடந்துகொள்ள வேண்டும். இல்லையெனில், அது அழித்தொழிக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார். மறுபுறம், போர் நிறுத்தத்தை காப்பாற்ற எகிப்து மற்றும் கத்தாரின் மத்தியஸ்தர்கள் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் ஆகிய இரு நாடுகளுடனும் தொடர்பில் இருப்பதாக இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
