தமிழ்நாடு உட்பட 12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்திற்கான அறிவிப்பை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில், தேர்தல் ஆணையம் 12 மாநிலங்களில் வாக்குத் திருட்டு விளையாட்டைத் தொடரத் தயாராகி வருவதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
Summary
தேர்தல் ஆணையம் 12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்யும் பணிகளைத் தொடங்கியுள்ளது. ஆனால், காங்கிரஸ் கட்சி, இது ‘வாக்குத் திருட்டு’ விளையாட்டாகும் என குற்றம் சாட்டியுள்ளது. பிகாரில் 69 லட்சம் வாக்குகள் நீக்கப்பட்டதைக் குறிப்பிட்டு, இதேபோல் மற்ற மாநிலங்களிலும் வாக்குகள் நீக்கப்படும் என அச்சம் தெரிவித்துள்ளது. இது ஜனநாயகத்திற்கு எதிரானது எனவும் கூறியுள்ளது.
பிகாரைத் தொடர்ந்து 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில், இரண்டாம் கட்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் நடைபெறவுள்ளது. இதில் அடுத்தாண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம், புதுச்சேரியும் அடக்கம். மேலும், அந்தமான் நிகோபார், சத்தீஸ்கர், கோவா, குஜராத், லட்சத்தீவு, மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் உத்தரபிரதேசத்திலும், இப்பணி நடைபெறவுள்ளது. எனினும் அடுத்தாண்டு தேர்தல் நடைபெறும் அசாம் மாநிலத்தில் திருத்தப்பணிகள் நடைபெறாது, குடியுரிமை சட்டம் தொடர்பான வழக்கு நடைபெறுவதுதான் அசாமிற்கு விலக்களிக்கப்பட்டதற்கு காரணம் என டெல்லியில் நேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தெரிவித்திருந்தார்.

ஞானேஷ் குமார், சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தம்
வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்திற்கு பிறகு வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டிருந்தால், மீண்டும் இணைப்பதற்கு தேவையான ஆவணங்கள் குறித்த அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, பெயர் விடுபட்ட வாக்காளர்கள் தங்களது வயது மற்றும் குடியிருப்புச் சான்றை ஆவணமாக சமர்பிக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. குடியிருப்பு சான்றாக வங்கி அல்லது அஞ்சல் பாஸ்புக், ரேஷன் கார்டு, பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம், வாடகை ஒப்பந்தம், மின்சாரம், தொலைபேசி கட்டண ரசீது, எரிவாயு இணைப்பு ரசீது உள்ளிட்டவற்றை சமர்பிக்கலாம் என தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. வயதை நிரூபிக்கும் வகையில் பிறப்பு சான்றிதழ், பள்ளி மதிப்பெண் பட்டியல், பான் அட்டை, ஆதார் அடையாள அட்டையை ஆவணமாக சமர்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் வாயிலாகவோ அல்லது வாக்குச்சாவடி நிலை அலுவலர் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம் என தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.
இதற்கிடையே தேர்தல் ஆணையம் 12 மாநிலங்களில் ‘வாக்குத் திருட்டு’ விளையாட்டைத் தொடரத் தயாராகி வருவதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அக்கட்சி, பிரதமர் நரேந்திர மோடியும் தேர்தல் ஆணையமும் இணைந்து செய்யும் பகிரங்கமான ‘வாக்குத் திருட்டு’ என்றும் கூறியுள்ளது. பிகாரில் நடைபெற்ற வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த நடவடிக்கை மூலம் 69 லட்சம் வாக்குகள் நீக்கப்பட்டதாக குற்றம்சாட்டியுள்ள காங்கிரஸ் கட்சி, தற்போது 12 மாநிலங்களில் உள்ள கோடிக்கணக்கான வாக்குகள் நீக்கப்படும் என்று அச்சம் தெரிவித்துள்ளது. இது ஜனநாயகத்திற்கு எதிரான சதி என்றும் மக்களின் உரிமைகளைப் பறிக்கும் முயற்சி என்றும் கூறியுள்ளது.
இந்நிலையில், பிகாரில் நடத்தப்பட்ட SIR குறித்த காங்கிரஸின் கேள்விகளுக்கு இன்னும் தேர்தல் ஆணையம் பதிலளிக்கவில்லை என்று, அக்கட்சியின் ஊடகம் மற்றும் விளம்பரப் பிரிவுத் தலைவர் பவன் கேரா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் மூலம், தகுதியான வாக்காளர்களின் பெயர்களை நீக்க பாஜக முயற்சிப்பதாகவும், இதன் மூலம் தேர்தல் ஆணையத்தை தங்கள் கைப்பாவையாக பயன்படுத்தப் பார்க்கிறது என்றும் பவன் கேரா குற்றம்சாட்டியுள்ளார்.
