
திருச்சி சிறுகனூரில் 27 ஏக்கரில் பெரியார் உலகம் அமைக்க திமுக சார்பில் மு.க.ஸ்டாலின் ஒரு கோடியே 70 லட்சம் ரூபாய் நிதி வழங்கினார்.

திருச்சியில் அமைய உள்ள பெரியார் உலகத்திற்காக திமுக சார்பில் ஒரு கோடியே 70 லட்சம் ரூபாய் நிதியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
திருச்சி மாவட்டம் சிறுகனூரில் 27 ஏக்கர் பரப்பளவில் ’பெரியார் உலகம்’ அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. பெரியாரைப் பற்றிய ஆய்வுகள், பெரியார் பயிலரங்கம், பெரியாரின் கொள்கைகளை உலகம் முழுவதும் எடுத்துச் செல்வதற்கான முன்னெடுப்புகள் என பிரமாண்டமாக அமைக்கப்பட உள்ளது. இந்த வளாகத்தின் முகப்பில், 155 அடியில் பெரியார் சிலை நிருவப்பட உள்ளது.
பெரியார் உலகம் கட்டமைப்புப் பணிக்காக திமுக நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களின் ஒரு மாத ஊதியத்தை வழங்குவதாக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
இந்நிலையில், சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலுக்கு சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஒரு கோடியே 70 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் நிதிக்கான காசோலையை திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணியிடம் வழங்கினார். அப்போது திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, ஆ.ராசா, அமைச்சர்கள் கே.என்.நேரு, சேகர்பாபு, எ.வ.வேலு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
இது குறித்த எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள முதலமைச்சர், பெரியார் எனும் பெருநெருப்பின் பேரொளியில் தமிழினம் தலைநிமிர்ந்து நடைபோடும் என்று பெருமிதம் தெரிவித்துள்ளார்.
