
தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என பான் இந்தியா நடிகராக 300-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார். இறுதியில் தனது சொத்துகளை வேலைக்கார பெண்மணிக்கு எழுதி வைத்தார்.

நடிகர் ரங்கநாத்
சினிமா நடிகர்கள் அனைவரின் வாழ்க்கையும் ஆடம்பரமாகவும், மகிழ்ச்சிகரமானதாகவும் இருப்பதில்லை. பல விதிவிலக்குகள் உண்டு. சினிமாவில் கோலோச்சிய நடிகர்கள் தங்களது தனிப்பட்ட வாழ்க்கையில் பல சிக்கல்களை எதிர்கொண்டிருக்கின்றனர். அப்படி ஒருவர் தான் இந்த நடிகர். தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என பான் இந்தியா நடிகராக வலம் வந்த இவரின் கடைசி காலம் என்பது சோகத்தில் முடிந்தது.

கடந்த 1946-ம் ஆண்டு ஒருங்கிணைந்த மெட்ராஸ் மாகாணத்தில் பிறந்தவர் நடிகர் ரங்கநாத். சினிமாவுக்கு வருவதற்கு முன்பு ரயில்வேயில் டிக்கெட் பரிசோதகராக பணியாற்றினார். சிறுவயதிலிருந்தே நடிப்பின் மீது இருந்த ஆர்வம் காரணமாக, அந்த வேலையை விட்டுவிட்டு சினிமாவில் நுழைந்தார். 1969-ம் ஆண்டு தெலுங்கில் வெளியான ‘பூத்திமந்தடு’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார்.

1974 ஆம் ஆண்டு ‘சந்தனா’ தெலுங்கு படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார். அதன் பிறகு, 40க்கும் மேற்பட்ட படங்களில் கதாநாயகனாக நடித்தார். மன்மதுடு, நியம், அதிவி ராமடு, தேவராயா, கோபாலா கோபாலா போன்ற பல படங்களில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார் ரங்கநாத்.

300 க்கும் மேற்பட்ட படங்களில் வில்லனாகவும், குணச்சித்திரக் கலைஞராகவும் நடித்துள்ளார். தமிழில் கடந்த 1984-ம் ஆண்டு வெளியான ‘கை கொடுக்கும் கை’ படத்தின் மூலம் நடிகராக கோலிவுட் ரசிகர்களுக்கு பரிட்சயமானார். அடுத்து ‘ராஜ ரிஷி’, ‘தேவன்’, அர்ஜூனின் ‘ஆணை’ ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் இந்தி படங்களிலும் நடித்து புகழ்பெற்ற ரங்கநாத்தின் கடைசி காலம் சோகத்தில் முடிந்தது. காரணம் ரங்கநாத்தின் மனைவி சைதன்யா உடல்நலக் குறைவால் கடந்த 2009-ம் ஆண்டு காலமானார். மனைவியின் மரணத்துக்குப் பிறகு உடைந்து போனார் ரங்கநாத். மன உளைச்சலில் இருந்தவர், கடந்த 2015-ம் ஆண்டு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

நடிகர் ரங்கநாத்தின் தற்கொலை ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. மேலும் தற்கொலை கடிதம் ஒன்றும் சிக்கியது. அதில் தனது சொத்துக்களை பணிப்பெண் மீனாட்சிக்கு எழுதி கொடுக்கவேண்டும் என்றும், அவரை எந்த தொந்தரவும் செய்ய வேண்டாம் எனவும் குறிப்பிட்டிருந்தார்.

இது தொடர்பாக ரங்கநாத்தின் மகள் நீரஜா கூறும்போது, “பணிப்பெண் மீனாட்சி பல ஆண்டுகளாக அம்மாவையும், அப்பாவையும் கவனித்துக் கொண்டார். இதன் அடிப்படையில் எனது தந்தை அவர் பெயரில் சொத்துகள் வாங்கினார். எங்களை விட என் அம்மாவுக்கும் அப்பாவுக்கும் அதிகமாக அந்த பணிப்பெண் உதவி செய்திருக்கிறார்” என்றார்.