
மத தடைகளை கடந்து காதலால் இந்த தம்பதிகள் ஒன்றிணைந்துள்ளனர். இந்திய கிரிக்கெட் வீரரை திருமணம் செய்துகொண்ட நடிகை குறித்து தெரியுமா?
பாலிவுட்டுக்கும் – கிரிக்கெட்டுக்கும் எப்போதும் பிரிக்க முடியாத இணைப்பு இருந்து கொண்டேயிருக்கும். இந்தி நடிகைகள் பலரும் கிரிக்கெட் வீரர்களை தங்கள் வாழ்க்கை துணையாக தேர்ந்தெடுத்த வரலாறு கடந்த காலங்களில் நிகழ்ந்துள்ளது. எல்லோருக்கும் தெரிந்த உதாரணம் என்றால் அது அனுஷ்கா ஷர்மா – விராட்கோலி.

ஆனால், அதற்கு முன்பாகவே கிரிக்கெட் வீரர் மன்சூர் அலிகான் பட்டோடியை நடிகை ஷர்மிளா தாக்கூர் காதலித்து கரம்பிடித்தார். இந்த பட்டியலில் பல கிரிக்கெட் வீரர்கள் – நடிகைகள் பெயர்கள் அடங்கும். அந்த வகையில், மத தடைகளையும் தாண்டி, தன் காதலை கரம்பிடித்த பாலிவுட் நடிகை பற்றி தெரியுமா?

அவர் தான் நடிகை சகாரிகா காட்கே. கடந்த 2007-ம் ஆண்டு ஷாருக்கான் நடிப்பில் பாலிவுட்டில் வெளியான ‘சக் தே இந்தியா’ படத்தின் மூலம் சினிமாவில் நடிகையாக அடியெடுத்து வைத்தார். அவரது அறிமுக படமே ஷாருக்கானுடன் என்பதால் அடுத்தடுத்த பட வாய்ப்புகள் கதவை தட்டின.

அடுத்து 2 ஆண்டுகள் இடைவெளிக்குப் பின் ‘ஃபாக்ஸ்’, ‘மிலே னா மிலே ஹம்’, ‘ரஷ்’ ஆகிய இந்திப் படங்களில் நடித்தார். மராத்தி, பஞ்சாபி படங்களில் நடித்தவர் கடைசியாக 2017-ல் வெளியான ‘இரடா’ இந்திப் படத்தில் நடித்தார். சின்னத்திரை நிகழ்ச்சிகளிலும் நடித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணி வீரர் ஜாகீர்கானை கடந்த 2017-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார் சகாரிகா காட்கே. யுவராஜ் சிங்கின் திருமணத்தின்போது இவர்களின் காதல் கதை பொதுவெளியில் தெரியவந்தது. இருவரும் வெவ்வேறு மதங்களை சேர்ந்தவர்கள். ஆனால், அதையும் தாண்டி இவர்களை ஒன்றிணைத்தது இவர்களுக்குள் இருந்த காதல்.

தன்னுடைய காதல் கதை குறித்து நடிகை சகாரிகா காட்கே கூறுகையில், “நாங்கள் வெவ்வேறு மதங்களைச் சேர்ந்தவர்கள். எங்கள் மதங்கள் தொடர்பாக எங்களை சுற்றியிருந்தவர்கள் தான் அதிகமாக பேசினார்களே தவிர, நாங்கள் உறுதியாக இருந்தோம். காரணம் என்னுடைய பெற்றோர் முற்போக்கான சிந்தனை கொண்டவர்கள்” என்றார்.

மேலும் ஜாகீர் கான் தான் ஐபிஎல் போட்டிகளின்போது தன்னிடம் காதலை வெளிப்படுத்தியதாக சகரிகா காட்கே தெரிவித்திருந்தார். “ஜாகீர்கான் என் அப்பாவை முதன்முறையாக சந்தித்து பேசிய போது இருவருக்குள்ளும் நல்ல பாண்டிங் ஏற்பட்டது. சொல்லப்போனால் என் அம்மாவுக்கு என்னைவிட ஜாகீர்கானை மிகவும் பிடிக்கும்” என்றார்.

8 வருட திருமண வாழ்கைக்கு பிறகு கடந்த ஏப்ரல் மாதம் சகாரிகா – ஜாகீர்கான் தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு ஃபதே ஹசன் கான் என பெயரிட்டுள்ளனர். வாடகை தாய் மூலம் சகாரிகா குழந்தையை பெற்றெடுத்தார் என்ற வதந்தியும் பரவி வருகிறது. ஆனால் அது தொடர்பாக அவர் இன்னும் விளக்கம் அளிக்கவில்லை.