தாலசீமியாவால் பாதிக்கப்பட்ட 5 குழந்தைகளுக்கு இரத்த மாற்றுக்குப் பிறகு எச்.ஐ.வி (HIV) தொற்று ஏற்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. சிவில் சர்ஜன், அதிகாரிகள் இடைநீக்கம் செய்யப்பட்ட நிலையில் உயர்மட்ட விசாரணைக்கும் உத்தரவு.
ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள மேற்கு சிங்பூம் மாவட்டத்தில் அமைந்துள்ள சைபாசா சதார் மருத்துவமனையில், தாலசீமியா நோயால் பாதிக்கப்பட்ட ஐந்து சிறுவர்களுக்கு இரத்த மாற்று சிகிச்சையின் போது எச்.ஐ.வி தொற்று ஏற்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தச் சிறுவர்கள் பல ஆண்டுகளாக இரத்த மாற்று சிகிச்சையை மேற்கொண்டு வந்தனர். இரத்த வங்கியில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் ஏற்பட்ட கடுமையான அலட்சியமே இந்தத் தொற்றுக்குக் காரணம் என ஆரம்பக்கட்ட விசாரணைகளில் சந்தேகிக்கப்படுகிறது.

ஒரு சிறுவனுக்கு முதலில் எச்.ஐ.வி தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் மேலும் நான்கு சிறார்களுக்குத் தொற்று இருப்பது உறுதியானது. இந்தச் சம்பவம் குறித்து ஜார்கண்ட் மாநில சுகாதாரத்துறை உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. மேற்கு சிங்பூம் மாவட்டத்தின் சிவில் சர்ஜன் உட்பட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அனைவரையும் உடனடியாக இடைநீக்கம் செய்யுமாறு முதலமைச்சர் ஹேமந்த் சோரன் உத்தரவிட்டுள்ளார். பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குழந்தைக்கும் அதன் குடும்பத்திற்கும் தலா ரூ. 2 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்றும், பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்குத் தேவையான முழுமையான சிகிச்சையும் மாநில அரசே ஏற்கும் என்றும் முதலமைச்சர் அறிவித்துள்ளார். அதோடு, ரத்த வங்கிகளில் ஆய்வு செய்து 5 நாட்களுக்குள் அறிக்கை சமர்பிக்க வேண்டுமென சுகாதாரத்துறைக்கு முதலமைச்சர் ஹேமந்த் சோரன் உத்தரவிட்டிருக்கிறார்.

இந்த விவகாரம் குறித்து ஜார்கண்ட் உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை எடுத்துக்கொண்டு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. இது மருத்துவமனைகளின் செயல்பாட்டுக் குறைபாடு மற்றும் இரத்த தானம் மூலம் கிடைக்கும் இரத்தப் பரிசோதனை நடைமுறைகளின் பாதுகாப்பு குறித்து கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாகப் பேசியிருக்கும் ஜார்கண்ட் மாநிலத்தின் கூடுதல் தலைமை செயலர் அஜோய் குமார், “பரிசோதனை நடைமுறைகளை ஆய்வு செய்யவும், கடுமையான விதிமுறைகளைப் பின்பற்றவும், கண்காணிப்பை வலுப்படுத்தவும் ஜார்கண்ட் மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் மற்றும் ராஜேந்திர மருத்துவ அறிவியல் நிறுவனம் சார்ந்த நிபுணர்கள் அடங்கிய ஒரு குழுவை அரசு அமைத்துள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சியான பாஜக இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனங்களைத் தெரிவித்திருக்கிறது. அம்மாநில பாஜக தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான பாபுலால் மராண்டி, இந்த சம்பவத்தை குழந்தைகளைக் கொல்ல அரசு ஆதரவுடன் நடத்தப்பட்ட முயற்சி என விமர்சித்திருக்கிறார். மேலும், இந்த சம்பவம், ஜார்கண்ட் சுகாதார அமைப்பின் சரிவை பிரதிபலிக்கிறது என்றும் தெரிவித்திருக்கிறார். ஒரு சில அதிகாரிகளை இடைநீக்கம் செய்வது மட்டும் போதுமானது அல்ல எனத் தெரிவித்திருக்கும் மராண்டி, சுகாதார துறை அமைச்சர் இர்ஆன் அன்சாரியை பதவிநீக்கம் செய்யவேண்டும் என்றும் தெரிவித்திருக்கிறார்.
