
இதுவரை இல்லாத வகையில், கூட்டணி தொகுதி பங்கீட்டில் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதாதளம் மற்றும் பாஜக ஆகிய இரு கட்சிகளும் சரிசமமாக தலா 101 தொகுதிகளில் போட்டியிடுகின்றன.

243 தொகுதிகளைக் கொண்ட பிகார் மாநிலத்திற்கான சட்டமன்றத் தேர்தல் நவம்பர் 6 மற்றும் 11 ஆகிய இரு தேதிகளில் இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகின்றன. இதில், முதல் கட்டமான வரும் 6ஆம் தேதி 121 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில், பாஜக, ஐக்கிய ஜனதாதளம் ஆகிய கட்சிகள் அங்கம் வகிக்கின்றன. அதேபோல், எதிர்க்கட்சியான மகாகத்பந்தன் கூட்டணியில் ராஷ்டிரிய ஜனதாதளம், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அங்கம் வகிக்கின்றன.
இந்நிலையில், வரும் நவம்பர் மாதம் 6ஆம் தேதி நடைபெற இருக்கும் முதற்கட்டத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்றுடன் நிறைவடைய இருக்கிறது. இதற்கிடையில், என்.டி.ஏ. கூட்டணியில் யார் முதலமைச்சர் வேட்பாளர் என்பது குறித்து இன்னும் தெளிவான அறிவிப்பு வரவில்லை.
பிகாரின் நீண்ட கால முதலமைச்சரான நிதிஷ் குமார் இந்தத் தேர்தலில் வென்ற பின்னும் அவரே முதல்வராக தொடர்வாரா எனும் கேள்வி பொதுவாக எழுந்துள்ளது. காரணம், இதுவரை இல்லாத வகையில், கூட்டணி தொகுதி பங்கீட்டில் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதாதளம் மற்றும் பாஜக ஆகிய இரு கட்சிகளும் சரிசமமாக தலா 101 தொகுதிகளில் போட்டியிடுகின்றன. இந்தப் பின்னணியில் தான் முதலமைச்சர் வேட்பாளர் குறித்தான வாதங்கள் அங்கு பெரிதும் எழுந்துவருகின்றன.
இந்தச் சூழலில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்த தேசிய பாஜகவின் முன்னாள் தலைவர் அமித்ஷாவிடம், என்.டி.ஏ. கூட்டணி வென்று ஆட்சி அமைத்தால் மீண்டும் நிதிஷ்குமார் முதலமைச்சராக்கப்படுவாரா என கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த அவர், “யார் முதலமைச்சர் என தேர்வு செய்வதற்கு நான் யார்? கூட்டணியில் பல கட்சிகள் உள்ளன. எனவே தேர்தலுக்கு பிறகு சட்டமன்றக் கட்சித் தலைவர்கள் கூடி பேசி முடிவு எடுக்கப்படும்” எனத் தெரிவித்தார்.