
மலேசியாவை அச்சுறுத்தும் புதிய வகை காய்ச்சல்.. புதிய வகை கொரோனாவாக இருக்குமோ என்ற அச்சத்தில் மக்கள் உள்ளனர்.
மலேசியாவில் புதிய வகை காய்ச்சல் தொற்று பரவல் ஏற்பட்டு வருகிறது.. இந்தியாவில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பரவிய எக்ஸ்.எப்.ஜி. என்ற புதிய கொரோனா வகை தொற்று பரவி வந்ததை போலவே இந்த தொற்றின் அறிகுறிகள் இருப்பதாகவும் இதுவரை இந்த புதிய வகை காய்ச்சலால் சுமார் 6000 மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் மலேசியாவின் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
கடந்த 2019 ஆம் ஆண்டில் சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவியது. இதனால் உலகின் அனைத்து நாடுகளுமே பெரும் பாதிப்புக்கு உள்ளாகின.. கொரோனா வைரஸ் பல உயிரிழப்புகள் மட்டுமின்றி, பொருளாதார அளவிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின என்றே சொல்லலாம்..

இந்நிலையில் தற்போது மலேசியாவில் புதிய வகை வைரஸ் காய்ச்சல் பரவி வருவதாக தென் சீனா மார்னிங் போஸ்ட் என்ற பத்திரிக்கை தகவல் வெளியிட்டுள்ளது.. அதில், மலேசியாவில் 6000 மாணவர்களுக்கு திடிரென உடல்நிலை சரியில்லாமல் இன்புளூயன்சா பாதிப்பு உறுதியாகி உள்ளது என்றும் பலரும் மர்ம காய்ச்சலால் அவதி அடைந்து வருகின்றனர் என்றும் தெரிவித்துள்ளது..
இதனையடுத்து பல மலேசிய பள்ளிகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. இறுதித் தேர்வுகளுக்கு சில வாரங்களே உள்ள நிலையில், இந்த திடீர் காய்ச்சல் அதிகரிப்பு, கொரோனாவாக இருக்குமோ என்று மக்களிடையே பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது.. இருப்பினும் இது குறித்து சுகாதார அதிகாரிகள் நிலைமை கட்டுப்பாட்டில் இருப்பதாக தெரிவித்துள்ளனர்…
இந்த தொற்றுகள் நாட்டின் பல பகுதிகளில் பதிவாகியுள்ளன. மேலும் நாடு முழுவதும் 97 இன்ஃப்ளூயன்ஸா கிளஸ்டர்களை சுகாதார அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது என்றும் இது ஒரு வாரத்திற்கு முன்பு 14 ஆக இருந்த நிலையில் தற்போது பெரிய அளவில் அதிகரித்து வருகிறது என்றும் தெரிவித்துள்ளனர்.. இந்த பாதிப்பில் பெரும்பாலும் பள்ளி செல்லும் மாணவ மாணவிகள் பாதிக்கப்பட்டுள்ளதால் விரைவான கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்..

மேலும் இந்த புதிய வகை தொற்றால் மலேசியாவின் பல பகுதிகளில், குறிப்பாக சிலாங்கூரில், மாணவர்களுக்கு காய்ச்சல், தொண்டை வலி மற்றும் சோர்வு போன்ற அறிகுறிகள் தென்படத் தொடங்கியுள்ளதாகவும் அவை இன்ஃப்ளூயன்ஸா ஏ மற்றும் பி தொற்றுகளின் அறிகுறிகள்தான் எனவும் உறுதி செய்யப்பட்டுள்ளது..
இந்த தொற்றின் பரவல் மிக வேகமாக இருப்பதால் உள்ளூர் சுகாதார அதிகாரிகள் பள்ளிகளை மூடி, பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு 5 முதல் 7 நாட்கள் வரை தனிமைப்படுத்தலை அமல்படுத்துமாறு அறிவுறுத்தியுள்ளனர்..

அத்துடன் அனைத்து மாவட்ட சுகாதாரக் அமைப்புகளும் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.. அதுமட்டுமல்லாமல் பள்ளிகளிலும் பொது இடங்களிலும் மக்கள் கூட்டம் கூட்டமாக செல்லக்கூடாது. கண்டிப்பாக அனைவரும் முகமுடியை அணிய வேண்டும் என்றும் வெளியில் அதிகமாக செல்வதை தவிர்க்க வேண்டும் என்றும் மலேசிய அரசு சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.