
உள்ளாட்சித் தேர்தல்களில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான (BC) இடஒதுக்கீட்டை 42 சதவீதமாக உயர்த்தக் கோரிய தெலங்கானா அரசின் மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்திருப்பது அரசுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
Summary
உள்ளாட்சித் தேர்தல்களில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான (BC) இடஒதுக்கீட்டை 42 சதவீதமாக உயர்த்தக் கோரிய தெலங்கானா அரசின் மேல்முறையீட்டு மனுவை (உயர்நீதிமன்றத்தின் இடைக்கால தடைக்கு எதிரான) உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்திருப்பது அரசுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
ஓபிசி பிரிவினருக்கு இடஒதுக்கீடு..
தெலங்கானாவில் முதல்வா் ரேவந்த் ரெட்டி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. முன்னதாக, இந்தக் கட்சி உள்ளாட்சி அமைப்புகளில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 42 சதவீத இடஒதுக்கீடு அளிக்கப்படும் என தோ்தல் வாக்குறுதி அளித்திருந்தது. இதையடுத்து, உள்ளாட்சித் தேர்தலில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீட்டை 29 சதவிகிதத்தில் இருந்து 42 சதவிகிதமாக அதிகரிக்கும் சட்டத் திருத்த மசோதா கடந்த மார்ச் மாதம் தெலங்கானா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. இதன்மூலம், கல்வி, வேலைவாய்ப்பு, உள்ளாட்சித் தேர்தல் உள்ளிட்டவற்றில் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு அதிகரிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து, உள்ளாட்சி அமைப்புகளில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 42 சதவீத இடஒதுக்கீடு அளிக்கப்படும் என்ற தோ்தல் வாக்குறுதியை நிறைவேற்றுவதாக கூறி தெலங்கானா அரசு கடந்த செப்டம்பா் 26ஆம் தேதி அரசாணை வெளியிட்டது. ரேவந்த் ரெட்டி அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிராக தெலங்கானா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

ரேவந்த் ரெட்டி
இடைக்கால தடை விதித்த தெலங்கானா உயர்நீதிமன்றம்
இதுதொடர்பாக, பல்வேறு தரப்பினர் தாக்கல் செய்த மனுக்கள் தலைமை நீதிபதி அபரேஷ் குமார் சிங், நீதிபதி மொஹியுதின் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. விசாரணையின்போது, “உள்ளாட்சித் தேர்தல்களில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த, 50 சதவீத இடஒதுக்கீடு உச்சவரம்பு பொருந்தும். ஓ.பி.சி. எனப்படும், இதர பிற்படுத்தப்பட்டோருக்கு கூடுதலாக இடஒதுக்கீடு வழங்க வேண்டுமெனில், அதுவும் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த ’மூன்று சோதனை’ கட்டமைப்பிற்குள்ளேயே இருக்க வேண்டும். இதுதொடர்பாக, மாநில அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்வதற்கு நான்கு வாரம் அவகாசம் அளிக்கப்படுகிறது. அதுவரை, இடஒதுக்கீடு தொடர்பாக மாநில அரசு பிறப்பித்த அரசாணைக்கு இடைக்கால தடை விதிக்கப்படுகிறது” என உயர்நீதிமன்றம் தெரிவித்திருந்தது.
மேல்முறையீடு செய்த தெலங்கானா அரசு
இதைத் தொடர்ந்து, இந்த விவகாரம் தொடா்பாக தெலங்கானா அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. நீதிபதி விக்ரம் நாத் மற்றும் நீதிபதி சந்தீப் மேத்தா ஆகியோர் அடங்கிய அமர்வுமுன்பு இந்த வழக்கு, இன்று விசாரணைக்கு வந்தது. விசாரணையின்போது, நீதிபதி விக்ரம் நாத் தெலுங்கானா அரசு வழக்கறிஞர் அபிஷேக் சிங்வியிடம், ”தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு முன்பு ஏன் BC இடஒதுக்கீடு செயல்படுத்தப்படவில்லை” என்று கேட்டார். ”ஆளுநர் மசோதாவை நிலுவையில் வைத்திருந்ததாகவும், தமிழ்நாடு ஆளுநர் வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மேற்கோள் காட்டி, கருதப்படும் ஒப்புதலின் அடிப்படையில் அது சட்டமாகிவிட்டது” என்றும் சிங்வி பதிலளித்தார். சட்டத்தையே சவால் செய்யாமல் தடை பெறப்பட்டுள்ளதாக அவர் வாதிட்டார்.

தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி
தொடர்ந்து அவர், “இந்த கொள்கையை அனைத்துக் கட்சிகளும் ஒருமனதாக ஆதரித்தன. எந்தவித கோரிக்கையும் இல்லாமல் இதை எப்படி தடை செய்ய முடியும்? உயர் நீதிமன்றத்தின் உத்தரவில் முதல் சில பக்கங்களைத் தவிர, தடைக்கான காரணங்கள் எதுவும் குறிப்பிடப்படவில்லை. சட்டமன்றத்தால் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட ஒன்றை, எந்தவித கோரிக்கையும் இல்லாமல் எப்படி தடை செய்ய முடியும். இந்திரா சஹானி வழக்கில் உச்ச நீதிமன்றம் 50% உச்சவரம்பை நிர்ணயித்தது. அதை மீறவே கூடாது என்ற தவறான கருத்து பொதுவாக நிலவுகிறது. ஆனால், அப்படி இல்லை.. விதிவிலக்கான சூழ்நிலைகளில் இந்த வரம்பு மீறப்பட்டுள்ளது. இதற்குப் பல உதாரணங்கள் உள்ளன” என வாதம் வைத்தார்.
மனுவைத் தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்
மறுபுறம், மூத்த வழக்கறிஞர் கோபால் சங்கரநாராயணன், இடஒதுக்கீடு வரம்புகள் தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் முந்தைய தீர்ப்புகளை மேற்கோள் காட்டி உயர் நீதிமன்றத் தீர்ப்பை ஆதரித்தார். இருதரப்பு வாதங்களைக் கேட்ட உச்ச நீதிமன்றம், ”வரம்புகளை மீறுவதற்கான விலக்குகள் தெலங்கானாவில் இல்லாத திட்டமிடப்பட்ட பகுதிகள் மற்றும் பழங்குடிப் பகுதிகளில் மட்டுமே பொருந்தும்” எனக் குறிப்பிட்டது. மேலும், ஏற்கெனவே உள்ள இடஒதுக்கீட்டின் அடிப்படையிலேயே தேர்தல்களை நடத்தலாம் என்று நீதிமன்றம் தெரிவித்தது.

அப்போது, மாநில அரசுக்கு இடஒதுக்கீடு குறித்து முடிவெடுக்கும் அதிகாரம் உள்ளதாக சிங்வி வாதிட்டார். விரிவான சர்வே அடிப்படையிலேயே இடஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். இருப்பினும், இதை ஏற்க மறுத்த உச்ச நீதிமன்றம், பழங்குடியினர் மற்றும் பட்டியல் இனத்தவர்கள் இல்லாத இடங்களில் இடஒதுக்கீடு 50%ஐ தாண்டக்கூடாது என்று கூறி, தெலங்கானா அரசின் மேல்முறையீட்டு மனுவை ரத்து செய்தது. முன்னதாக, மகாராஷ்டிரா மற்றும் மத்தியப் பிரதேசம் போன்ற மாநிலங்களிலும்கூட இட ஒதுக்கீடு வரம்பை அதிகரிக்கும் முயற்சிகளை உச்ச நீதிமன்றம் ரத்து செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.