
ஹமாஸ் அனுப்பிய எட்டு உடல்களில் ஒன்று, பிணைக்கைதியின் உடல் அல்ல என இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
Summary
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பின் 20 அம்ச அமைதித் திட்டப் பரிந்துரைப்படி, காஸாவில் தற்போது போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளது. அந்த அமைதி ஒப்பந்தத்திற்கு இஸ்ரேலும் ஹமாஸும் சம்மதம் தெரிவித்ததைத் தொடர்ந்து, இருதரப்பிலும் பிணைக்கைதிகள் பரிமாறப்பட்டு வருகின்றனர். அதன்படி, ஹமாஸ் பிடித்துச் சென்ற பிணைக்கைதிகளில் இதுவரை உயிருடன் இருந்த 20 பேரும் இஸ்ரேலிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்குப் பதில் இஸ்ரேலிய தரப்பிலிருந்து பாலஸ்தீனிய கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர். மேலும், உயிரிழந்த 28 பிணைக்கைதிகளின் உடல்களையும் ஒப்படைக்கச் சொல்லி இஸ்ரேல் வலியுறுத்தியது.

ஹமாஸ், இஸ்ரேல்
அந்த வகையில், ஹமாஸ் 8 உடல்களை ஒப்படைத்துள்ளது. அவற்றில் ஒரு நேபாளி, ஆறு இஸ்ரேலியர் உட்பட மொத்தம் 8 உடல்களை ஹமாஸ் அனுப்பிவைத்துள்ளது. அதில் ஒன்று, பிணைக்கைதியின் உடல் அல்ல என இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. முழுத் தடயவியல் பரிசோதனைகளுக்குப் பிறகு, அந்த உடல், பணயக்கைதிகளில் எவருடனும் பொருந்தவில்லை என்று இஸ்ரேலிய இராணுவ மருத்துவ அதிகாரிகள் குழு தெரிவித்துள்ளது.
இதையடுத்து, இறந்த பணயக்கைதிகளை திருப்பி அனுப்ப ஹமாஸ் தேவையான அனைத்து முயற்சிகளையும் எடுக்க வேண்டும் என இஸ்ரேலிய இராணுவம் எச்சரித்துள்ளது.

பிணைக்கைதிகள் உடல்
ஹமாஸ், இப்படி தவறான உடலை இஸ்ரேலுக்கு திருப்பி அனுப்புவது இது முதல் முறை அல்ல எனக் கூறப்படுகிறது. இந்த ஆண்டின் தொடக்கத்தில், முந்தைய போர் நிறுத்தத்தின்போது, ஷிரி பிபாஸ் மற்றும் அவரது இரண்டு மகன்களின் உடல்களை ஒப்படைத்ததாக அந்தக் குழு கூறியது. ஆனால், திருப்பி அனுப்பப்பட்ட உடல்களில் ஒன்று பாலஸ்தீனப் பெண் என அடையாளம் காணப்பட்டார். பின்னர், ஒருநாள் கழித்து பிபாஸின் உடல் திருப்பி அனுப்பப்பட்டு, அது உறுதியாக அடையாளம் காணப்பட்டது.