
கூட்டணிக் கணக்குகள் பற்றி பரபரப்பான விவாதங்கள் நடைபெற்று வரும் நிலையில் சென்னையில் அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பாமக நிறுவனர் ராமதாஸை முக்கியத் தலைவர்கள் கட்சி பேதமின்றி சந்தித்துள்ளது பேசுபொருளாகியுள்ளது.
பாமக நிறுவனர் ராமதாஸ் உடன் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
இன்னும் சில மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தலை தமிழ்நாடு எதிர்கொள்ளவுள்ள நிலையில் திமுக மற்றும் அதிமுக போன்ற பெரிய கட்சிகளுடன் கூட்டணி சேர சிறிய கட்சிகள் வியூகங்களை வகுத்து வருகின்றன. மேலும் யாருடன் சேர்ந்தால் லாபம் அதிகம் என சீர்தூக்கிப் பார்த்து வருகின்றன. திமுகவும், அதிமுகவும் கூட்டணியை அமைத்துவிட்ட போதிலும், தேமுதிக, பாமக போன்ற கட்சிகள் இன்னும் கூட்டணி தொடர்பாக வெளிப்படையாக முடிவு எடுக்காமல் உள்ளன. பிரிந்து கிடக்கும் பாமகவில் அன்புமணி தரப்பு பாஜகவுடன் ராசியாக உள்ள நிலையில் நிறுவனர் ராமதாஸ் பாஜக எதிர்ப்பு மனநிலையில்தான் காணப்படுவதாக கூறப்படுகிறது.
இதனிடையே கூட்டணி ஆட்சிக்கும் தயார் என அறிவித்திருந்த தவெகவை தங்கள் முகாமுக்கு ஈர்க்க பாஜக முயற்சிக்கிறது.. விஜயுடன் அதிமுக பேச்சுவார்த்தை நடத்துவதாக டிடிவி தினகரனும் பேசியிருந்தார். இவ்வாறு கூட்டணிக் கணக்குகள் பற்றி பரபரப்பான விவாதங்கள் நடைபெற்று வரும் நிலையில் சென்னையில் அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பாமக நிறுவனர் ராமதாஸை முக்கியத் தலைவர்கள் கட்சி பேதமின்றி சந்தித்துள்ளது பேசுபொருளாகியுள்ளது.
குறிப்பாக, முதலமைச்சர் ஸ்டாலின், பாமக நிறுவனர் ராமதாஸ் சிகிச்சை பெற்றுவரும் அப்போலோ மருத்துவமனைக்கே நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். அங்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்தும் கேட்டறிந்தார். அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் ராமதாஸை நேரில் சந்தித்து நலம் விசாரித்தது பரபரப்பைக் கூட்டியது. கூட்டணியை தானே பேசி முடிப்பேன் என ராமதாஸ் பேசி வரும் நிலையில் இச்சந்திப்பும் கவனம் பெற்றுள்ளது.