
புதுச்சேரியில் சாலை ஓர வியாபாரிகளின் நிர்வாகிகள் சங்க தேர்தல் ரத்து செய்யப்பட்டதால் போலீசாருக்கும் தொழிற்சங்கத்தினருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது.

புதுச்சேரியில் போலீசாருக்கும் தொழிற்சங்கத்தினருக்கும் இடையே கடும் மோதல்
புதுச்சேரியில் சாலை ஓர வியாபாரிகளின் நிர்வாகிகள் சங்க தேர்தல் கம்பன் கலையரங்கில் இன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக கடந்த ஒரு மாதமாக வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்ட வியாபாரிகள் இன்று காலை ஆர்வமாக வாக்களிக்க வந்தனர். ஆனால் திடீரென நகராட்சி ஆணையர் தேர்தல் ரத்து செய்யப்படுவதாக அறிவித்தார்.
இதனால் ஆத்திரமடைந்த சாலை ஓர வியாபாரிகள் மற்றும் அவர்களுக்கு ஆதரவான தொழிற்சங்க அமைப்பினர் புதுச்சேரி அண்ணா சிலை அருகே மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். இதையடுத்து, கம்பன் கலையரங்கிலிருந்து அண்ணா சிலை நோக்கி போராட்டக்காரர்கள் கோஷங்கள் எழுப்பியவாறு சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போராட்டக்காரர்களை போலீசார் அப்புறப்படுத்த முயலும் போது போலீசாரும் போராட்டக்காரர்களும் மோதிக்கொண்டு ஒருவருக்கொருவர் தாக்கி கொண்டு கைகலப்பில் ஈடுபட்டனர்.
இதனால் போராட்ட களமே போர்க்களமாக காட்சியளித்தது. தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மறியல் போராட்டத்தை மீறி செல்ல முயன்ற பொதுமக்களை போராட்டக்காரர்கள் தடுத்தனர். இதனால் கடுமையான தள்ளுமுள்ளு வாக்குவாதம் ஏற்பட்டது.
இதனை அடுத்து போராட்டக்காரர்களை போலீசார் கைது செய்தனர். இது குறித்து போராட்டக்காரர்கள் கூறும் போது, முதலமைச்சர் தூண்டுதலின் பேரில் இந்த தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனை வன்மையாக கண்டிப்பதாகவும் உடனடியாக ரத்து செய்யப்பட்ட தேர்தலை நடத்த வேண்டும் எனவும் வலியுறுத்தினார்கள்.