
சட்டமன்ற கூட்டத்தொடரில் இந்தி மொழிக்கு தடை விதிக்கும் மசோதாவை தாக்கல் செய்ய உள்ளதாக வதந்தி பரவுவதாக தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் கடந்த செவ்வாய்கிழமை தொடங்கியது. முதல்நாளில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அன்று முழுவதும் சட்டப்பேரவை ஒத்திவைக்கப்பட்ட நிலையில், புதன்கிழமை பேரவை மீண்டும் கூடியது.
இதற்கிடையே இருமொழிக் கொள்கைக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், தமிழ்நாடு அரசு அனைத்து வகையிலும் இந்தி மொழிக்கு தடைவிதிக்கும் மசோதாவை நடந்துவரும் சட்டமன்ற கூட்டத்தொடரில் தாக்கல் செய்ய இருப்பதாக தகவல் வெளியானது.

சட்டப்பேரவை முதல்வர் மு.க.ஸ்டாலின்
இத்தகவல் சமூக ஊடகங்களில் விவாதங்களை உண்டாக்கியது. இத்தகைய சூழலில், பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை வெளியிட்ட எக்ஸ் தள பதிவில், ஆந்திர முதல்வர் 15 பில்லியன் டாலர் முதலீட்டில் ஏஐ தரவு மையத்தை விசாகப்பட்டினத்தில் அமைக்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருப்பதாகவும், ஆனால், தமிழ்நாடு முதல்வர் நம் மாநிலத்தில் இந்தியை தடை செய்யும் மசோதாவை கொண்டுவர பார்க்கிறார் என்றும் பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில், தமிழ்நாடு அரசின் தகவல் சரிபார்ப்பகம் இது தொடர்பான தகவலை மறுத்திருக்கிறது. தகவல் சரிபார்ப்பகம் வெளியிட்டிருக்கும் எக்ஸ் தள பதிவில், இந்தி மொழிக்கு தடை விதிக்கும் மசோதாவை முதல்வர் தாக்கல் செய்ய இருப்பதாக செய்திகள் வெளியானதாகவும், இது முற்றிலும் வதந்தியே என்றும் தெரிவித்துள்ளது. அப்படி எந்தவொரு மசோதாவுக்கான முன்மொழிவும் பெறப்படவில்லை என்று சட்டப்பேரவை செயலர் தெரிவித்துள்ளதாகவும் தகவல் சரிபார்ப்பகம் விளக்கம் அளித்துள்ளது.