
கரூரில் விஜய் பிரச்சாரத்தின்போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கரூர் மேற்கு மாவட்டச் செயலாளர் மதிவாணன் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது தவெக மாநகர மாவட்ட நிர்வாகியும் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், கரூர் துயர சம்பவத்திற்கு சீனா இரங்கல் தெரிவித்துள்ளது.
கரூர் மாவட்டம், வேலுச்சாமிபுரத்தில் செப்டம்பர் 27 ஆம் தேதி தவெக தலைவர் விஜய் பிரச்சாரம் மேற்கொண்டார். காலையில் வருவதாக அறிவித்த விஜய் இரவு 7 மணி அளவில் தான் வந்தார். இதனால் ஏராளமான பெண்கள், குழந்தைகள், இளைஞர்கள் விஜய்யை பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டனர். இதனால் நேரம் செல்ல கட்டுக்கடங்காத கூட்டம் கூடியது. இந்த கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலால் குழந்தைகள், பெண்கள் என 41 பேர் உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவத்திற்கு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, பிரதமர் மோடி, எதிர்க்கட்சி தலைவர் என பலரும் இரங்கல் தெரிவித்தனர். முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான்,மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இணையமைச்சர் எல் முருகன் உள்பட பலரும் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தனர்.
இந்நிலையில், கரூர் துயர சம்பவத்திற்கு சீனா இரங்கல் தெரிவித்துள்ளது. பெய்ஜிங்கில் சீனா வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ஜியு கியாகுன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், ‘தமிழ்நாடு கரூர் மாவட்டத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் மிகுந்த வேதனை அளிக்கிறது.
உயிரிழந்தவா்கள் குடும்பத்தினருக்கு எங்களுடைய ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். மருத்துவ சிகிச்சையில் இருப்பவா்கள் விரைவில் குணமடைய வேண்டும். இந்தியாவில் உள்ள சீன தூதரகமும் இந்த சம்பவத்துக்கு ஆழ்ந்த வருத்தத்தையும், இரங்கலையும் பதிவு செய்துள்ளது’ என்றாா்.