கடந்த 3 மாதங்களில் மட்டும் ரஷ்யாவிடம் இருந்து சுமார் 15 பில்லியன் டாலர் மதிப்பிலான எண்ணெயை இந்தியா வாங்கியுள்ளது.
கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்னர் உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்தது. இதனைத் தொடர்ந்து உக்ரைனுக்கு ஆதரவாக ஐரோப்பிய நாடுகள் களமிறங்கின. மேலும் நேட்டோ அமைப்பும் உக்ரைனுக்கு ஆதரவாக தங்கள் ராணுவ உதவிகளை வழங்கி வருகிறது.
அதுமட்டுமன்றி ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்கா ஆகியவை ரஷ்யா மீது ஏராளமான பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளன. ரஷ்யாவின் முக்கிய வருமானமாக கச்சா எண்ணெய் ஏற்றுமதி உள்ள நிலையில், அதனை ஏற்றுமதி செய்ய மேற்கத்திய நாடுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளன.

இந்த சூழலில் தள்ளுபடி விலையில் பிற நாடுகளுக்கு கச்சா எண்ணெயை விற்பனை செய்ய ரஷ்யா முன்வந்தது. இதனைப் பயன்படுத்தி இந்தியா, சீனா ஆகிய நாடுகள் ரஷ்ய கச்சா எண்ணெயை அதிக அளவில் கொள்முதல் செய்தன. ஒரு கட்டத்தில் இந்தியாவின் தேவையில் 50 சதவீதத்துக்கும் அதிகமாக ரஷ்யா கச்சா எண்ணெயை சார்ந்தே இருந்தது.
மேற்கத்திய நாடுகள் விதித்த பொருளாதார பாதிப்பில் இருந்து மீள இந்தியாவின் இந்த நடவடிக்கையே ரஷ்யாவுக்கு உதவிகரமாக இருந்தது. இந்த நிலையில், மார்ச், ஏப்ரல், மே என கடந்த 3 மாதங்களில் மட்டும் ரஷ்யாவிடம் இருந்து சுமார் 15 பில்லியன் டாலர் அதாவது 1.38 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான எண்ணெயை இந்தியா வாங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

கடந்த டிசம்பர் 2025 முதல் பிப்ரவரி 2026 வரையிலான காலக்கட்டத்தில் இந்தியா ரஷ்யாவிடமிருந்து 42,506 கோடி ரூபாய் மதிப்பிலான கச்சா எண்ணெய் மட்டுமே வாங்கிது, இந்த சூழலில் , கடந்த 3 மாதத்தில் அது பல மடங்காக அதிகரித்துள்ளது. ரஷ்யா இந்த கச்சா எண்ணெய்க்கு டாலருக்கு பதில் இந்திய ரூபாயிலேயே பணம் அனுப்பும் சூழலில், இந்தியாவுக்கு அந்நிய செலாவணியும் மிச்சமாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
