தமிழ்த் திரையுலகின் ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான இரா.செழியன் சென்னையில் இன்று காலை காலமானார்.
உடல்நலக்குறைவு காரணமாக தரமணியில் உள்ள தனியார் கேன்சர் மருத்துவமனையில் இரா.செழியன் சிகிச்சை பெற்று வந்தநிலையில், சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார். அவரது மறைவு திரையுலகினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. செழியன் மறைவுக்கு திரையுலகினரும், பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். உயிரிழந்த செழியன், ‘கல்லூரி’, ’தென்மேற்கு பருவக்காற்று’, ’பரதேசி’, ’ஜோக்கர்’ உள்ளிட்ட படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார்.

இவர் இயக்கிய டூலெட் (TOLET) திரைப்படம், 2018-ஆம் ஆண்டுக்கான சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருது பெற்றது. சிவகங்கையைச் சேர்ந்தவரான செழியன் ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராமிடம் உதவி ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர். எழுத்தாளர், பாடலாசிரியர் என பன்முகத்திறமை பெற்றவர் இரா.செழியன். உலக சினிமா என்ற நூலையும் எழுதியுள்ளார்.
