`தர்மன்’ பட அறிமுக விழா நிகழ்வில் நடிகர் கமல்ஹாசன் பேசினார்.
ரஜினிகாந்த் நடிப்பில் கமல்ஹாசன் தயாரிப்பில் அஷ்வத் மாரிமுத்து இயக்கும் `தர்மன்’ பட அறிமுக விழா இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் பேசிய கமல்ஹாசன், “என்னை இந்தப் படம் தயாரிக்கும்வரை மார்க்கெட்டில் வைத்திருந்ததற்கு நன்றி. 50 வருடம் முன்பு துவங்கிய நட்பு எனச் சொன்னார்கள். துவங்கிய சில வருடங்களில் இருவருமே சமமான நிலைக்கு வந்துவிட்டோம். ஒருகட்டத்தில் இணைந்து நடிப்பதை குறைத்துக் கொள்ளலாமா என்று பேசினோம்.

அப்போதே நாங்கள் எடுத்த முடிவு என்னவென்றால், நாம் இணைந்து நடிக்கும் படம் என்றால் ஒன்று நானோ, இல்லை நீங்களோதான் தயாரிக்க வேண்டும் என முடிவு செய்தோம். அப்படி பேசியே 40 வருடம் கடந்துவிட்டது. மறுபடி இந்த அலுவலகத்தைத் திறக்க வர வந்தபோது மாடியில் நின்று மறுபடி அதைப் பேசினோம். ஜாதகம் கிடைக்குமவரை தேடுவதபோல தேடி இப்போது இரண்டு படம் செய்கிறோம். ஒன்று இது, இன்னொன்று நாங்கள் இணைந்து நடிக்கும் படம்.
இதில் எங்களுக்கு என்ன பெருமை என்றால் AVM வேப்பமரத்து நிழலில் பேசிக் கொண்டிருந்த இரு இளைஞர்கள், இவ்வளவு தூரம் வந்திருக்கிறோம். யாருடைய கருணை என இருவருக்கும் தெரியாது. யாருடைய கருணை என்றாலும் இருவரும் தலைவணங்குகிறோம். வருவோம் என தெரியாது, ஆனால் இவ்வளவு தூரம் வருவோம் என எதிர்பார்க்கவில்லை.

வழக்கமாக படத்தின் தயாரிப்பாளர்தான் ஓடி ஆடி வேலை செய்வார். ஆனால் இதில் எல்லா வேலையும் செய்தது இவர் (ரஜினி) தான். நான் சும்மா வேடிக்கை மட்டுமே. இந்த எல்லாப் பொறுப்பும் இப்போது அந்த இயக்குநருக்கு வந்திருக்கும். அவரை நான் பயமுறுத்தவில்லை. உங்களுக்கு பக்கபலம் இருக்கிறது என்பதற்காக சொல்கிறேன்” என்றார்
