நான் நிறையப் பேரைச் சந்திக்கிறேன். அவர்களில் பத்தில் எட்டுப் பேருக்கு தமிழ் எழுதவே வருவதில்லை. ஆனால், ஆங்கிலம் நன்றாகத் தெரிகிறது. அது மிகவும் வருத்தமான விஷயம்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் தனுஷ். இவர் படித்த தாய் சத்யா மெட்ரிகுலேஷன் பள்ளியில் சாதாரண மேற்கூரை அமைக்கப்பட்டு இருந்த கட்டடம் ஒன்றை அகற்றிவிட்டு, அதற்குப் பதிலாக மூன்று தளங்கள் கொண்ட கான்கிரீட் கட்டடம் ஒன்றை தனது சொந்த செலவில் கட்டிக் கொடுத்துள்ளார். தற்போது அதற்கு ‘தனுஷ் பிளாக்’ என்றே பெயர் சூட்டப்பட்டுள்ளது. அதன் திறப்பு விழாவில் கலந்துகொண்டு பேசியவர், “நான் நிறைய நிகழ்வுகளுக்குச் செல்கிறேன். அதில் பல நிகழ்வுகள் எப்போதுதான் முடியும் என இருக்கும். முதல் முறை ஒரு நிகழ்வில் இது முடியவே வேண்டாம், கிளம்பவே வேண்டாம், இங்கேயே இருக்கலாம் எனத் தோன்றியது. அது இங்குதான். என்னுடைய ஆசிரியர்களைப் பார்க்கையில் பல நினைவுகள் வருகின்றன. வாணி மிஸ் மிகவும் கருணைமிக்க நபர். முன்பெல்லாம் நான் படிக்கும்போது ஆங்கிலம் எனக்கு வராது. ஆனால், தமிழ் நன்றாக வரும். இப்போது அப்படியே மாறிவிட்டது.

Dhanush
நான் நிறையப் பேரைச் சந்திக்கிறேன். அவர்களில் பத்தில் எட்டுப் பேருக்கு தமிழ் எழுதவே வருவதில்லை. ஆனால், ஆங்கிலம் நன்றாகத் தெரிகிறது. அது மிகவும் வருத்தமான விஷயம். நான் ஒரு பிரஞ்சு மொழித் தயாரிப்பில் ஒரு படம் நடித்தேன். பெல்ஜியமில் படப்பிடிப்பு நடந்தது. என்னிடம், ’ஆங்கிலம் தெரியுமா’ எனக் கேட்டதும், ’தெரியும்’ எனச் சொன்னேன். அவர்கள் ஆச்சர்யமாகப் பார்த்தார்கள். ஏன் ஆச்சர்யப்படுகிறீர்கள் எனக் கேட்டதும், ’உங்கள் தாய்மொழி தானே உங்களுக்கு தெரிய வேண்டும், ஆங்கிலம் உங்களுக்கு போனஸ்தானே’ என்றார்கள். உங்களுடைய தாய் மொழிதான் உங்களுக்கு முதலில் தெரிய வேண்டும்.
அதனை எழுதப் படிக்க தெரிய வேண்டும். தமிழ் வரவில்லை எனச் சொல்வது பெருமையான விஷயம் கிடையாது. தாய் மொழி தெரியவில்லை என்றால் அது அவமானம்தான். கண்டிப்பாக, தாய்மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். நான் இந்த நேரத்தில் என் தமிழ் ஆசிரியை சித்ராவை நினைத்துக் கொள்கிறேன். அவர், எனக்கு மிகவும் பிடித்த ஆசிரியை. தமிழிலும் கவனம் செலுத்துங்கள்.
Dhanush School
இந்த வளாகம் இன்னும் பெரியதாக வேண்டும். இங்கு எத்தனை பேர் இருக்கிறீர்களோ, அத்தனை பேரின் பெயரிலும் கட்டடங்கள் வரவேண்டும். அந்த விழாவுக்கும் நான் வந்து பார்க்க வேண்டும். எனக்கு அந்த அனுபவம் கிடைக்கும் என நம்புகிறேன். நன்றாக படியுங்கள்” என்றார்.
