இன்ஸ்டாகிராமில் ஆடைகளை விற்பனை செய்துவரும் வயதான பெண் ஒருவர் கால்பந்து வீரர்களின் பெயர்களை தவறாக உச்சரித்தது இணையத்தில் வைரலானது. அதுகுறித்து பேசியிருக்கும் கிரிக்கெட்டர் அஸ்வின், செல்வி அக்கா இந்தியாவில் FIFA-ஐ டிரெண்ட் பண்ணிட்டாங்க என பாராட்டினார்.
Summary
FIFA உலகக்கோப்பை காய்ச்சலில் உலகம் முழுக்க ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கும் வேளையில், இந்தியாவில் வயதான பெண் ஒருவர் கால்பந்து ஜெர்ஸி விளம்பர வீடியோ மூலம் இணையத்தை கலக்குகிறார். லாமின் யமால் பெயரை ‘லக்ஷ்மி அம்மாள்’, மெஸ்ஸியை ‘லெஸ்ஸி’, ரொனால்டோவை ‘நரோடா’ என நகைச்சுவையாக மாற்றி கூறிய அவரது பேச்சு வைரலாக, இந்திய கிரிக்கெட் நட்சத்திரம் ரவிச்சந்திரன் அஸ்வின் கூட பாராட்டி பேசியுள்ளார்.
உலகிலேயே அதிகம் பேரால் பார்க்கப்படும் மிகப்பெரும் விளையாட்டுத் தொடரான FIFA கால்பந்து உலகக்கோப்பை ஜூன் 11-ஆம் தேதியன்று கோலாகலமாக தொடங்கியது. மெஸ்ஸி, ரொனால்டோ, நெய்மர் போன்ற கால்பந்து ஜாம்பவான்களுக்கு இது கடைசி உலகக்கோப்பையாக இருக்கும் நிலையில், ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பை இத்தொடர் ஏற்படுத்தியுள்ளது.
மேலும் எதிர்கால சூப்பர்ஸ்டார் வீரர்களான எம்பாப்பே, எர்லிங் ஹாலண்ட், லாமின் யமால், பெல்லிங்காம், வினிசியஸ் ஜூனியர், ஜமால் முசியாலா, சாகா, புளோரியன் விர்ட்ஸ், ஜூலியன் ஆல்வரேஸ் என பல நட்சத்திர வீரர்களும் தங்களுடைய முத்திரையை பதிக்க காத்திருக்கின்றனர்.

கால்பந்து உலகக்கோப்பை 2026
இந்தசூழலில் தான் கால்பந்து உலகக்கோப்பையை முன்னிட்டு, கால்பந்து வீரர்களின் ஜெர்ஸியை விற்பனைசெய்யும் விதமாக இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியிட்டிருந்த வயதான பெண் ஒருவர், கால்பந்து வீரர்களின் பெயரை மாற்றி கூறியது இணையத்தில் வைரலானது. லாமின் யமால் பெயரை லக்ஷ்மி அம்மாள் எனவும், மெஸ்ஸி பெயரை லெஸ்ஸி எனவும், ரொனால்டோ பெயரை நரோடா எனவும் கூறியது ரசிகர்களை கவர்ந்தது.
அந்த வீடியோவை பார்த்து ரசித்த இந்திய கிரிக்கெட்டர் ரவிச்சந்திரன் அஸ்வின், அவரின் பேச்சு தன்னை கவர்ந்துவிட்டதாகவும், எல்லோரும் ஃபிஃபா உலகக்கோப்பையை இந்தியாவிற்கு கொண்டுவர என்னென்னமோ செய்கிறார்கள், ஆனால் செல்வி அக்கா ஃபிஃபா உலகக்கோப்பையை தனியாளாக இந்தியாவிற்கு கொண்டுவந்துவிட்டார் என பாராட்டியுள்ளார். அஸ்வின் பாராட்டிய வீடியோவும் இணையத்தில் வைரலாகி வருகிறது.
