அதிருப்தி திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 20 எம்.பி.க்கள், திரிபுராவின் அதிகம் அறியப்படாத கட்சியான என்.சி.பி.ஐ.யுடன் இணைந்தனர்.
Summary
டெல்லியில் 20 திரிணமூல் எம்.பிக்கள், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவை சந்தித்து, 2020ல் தொடங்கப்பட்டு 2023ல் முதல் தேர்தலில் போட்டியிட்ட NCPI கட்சியில் இணைவதாக அறிவித்துள்ளனர். திரிபுரா பழங்குடியினர் நலனுக்காக உருவான, ஹவுராவை தலைமையிடமாகக் கொண்ட இந்த சிறிய பதிவு செய்யப்பட்ட கட்சி, இதுவரை நாடாளுமன்றத்தில் எம்.பி இல்லாத நிலையில், இப்போது தேசிய கவனத்தை ஈர்த்துள்ளது.
டெல்லியில் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவை நேரில் சந்தித்து ‘நேஷனலிஸ்ட் சிட்டிசன்ஸ் பார்ட்டி ஆஃப் இந்தியா’ (NCPI) என்ற கட்சியில் இணைவதாக 20 திரிணாமுல் காங்கிரஸ் எம்பிக்கள் கடிதம் அளித்துள்ளனர். மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு மம்தா பானர்ஜியின் கட்சியில் ஏற்பட்டுள்ள இந்த அசுர பிளவு தேசிய அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போதைய நிலவரப்படி மம்தா பானர்ஜி தரப்பில் 8 எம்பிக்கள் மட்டுமே எஞ்சியுள்ளனர்.

Kakoli Ghosh Dastidar
இந்நிலையில், ஜூலையில் தொடங்கவுள்ள நாடாளுமன்றக் கூட்டத்தொடரில், மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை பலம் தங்களிடம் இருப்பதால் தாங்களே உண்மையான திரிணமூல் காங்கிரஸ் என உரிமை கோரவும் இந்த அதிருப்தி குழுவினர் திட்டமிட்டுள்ளனர். பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் உள்ள என்டிஏ கூட்டணியுடன் இணைந்து செயல்படுவோம் என அதிருப்தி எம்பியான ககோலி கோஷ் தஸ்திதார் தெரிவித்துள்ளார்.
NCPI கட்சியின் பின்னணி என்ன?
திரிணமூல் கட்சியின் 20 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இணைந்த ‘நேஷனலிஸ்ட் சிட்டிசன்ஸ் பார்ட்டி ஆஃப் இந்தியா’ (Nationalist Citizens Party of India – NCPI) 2020-ல் தொடங்கப்பட்டு, 2023-ல் தனது முதல் தேர்தலில் போட்டியிட்ட ஒரு கட்சியாகும். திரிபுராவில் பழங்குடியினர் நலனுக்காகத் தொடங்கப்பட்டு, மேற்கு வங்கத்தின் ஹவுராவை தலைமையிடமாகக் கொண்ட ஒரு பதிவு செய்யப்பட்ட சிறிய அரசியல் கட்சியாகும்.

NCPI
தற்போது இக்கட்சிக்கு நாட்டின் எந்தப் பகுதியிலும் நாடாளுமன்ற உறுப்பினர் எவரும் இல்லை. திரிபுரா சட்டமன்றத் தேர்தலுக்குச் சில வாரங்களுக்கு முன்பு, 2023 ஜனவரி 20 அன்று, NCPI தேர்தல் ஆணையத்தில் ‘பதிவுசெய்யப்பட்ட ஆனால் அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சியாக’ (RUPP) இருந்தது. வங்காளத்தில் பதிவு செய்யப்பட்டிருந்தாலும், இக்கட்சி தனது தேர்தல் களப் பயணத்தைத் திரிபுராவில் தொடங்கியது.
தேர்தல் ஆணையத்தின் பதிவுகளின்படி, இக்கட்சி மொத்தம் ரூ. 1.13 லட்சம் நன்கொடைகளை மட்டுமே பெற்றுள்ளது.
திரிபுரா பழங்குடியினர் பகுதிகள் தன்னாட்சி மாவட்டக் கவுன்சில் (TTAADC) பகுதியில் உள்ள பின்தங்கிய பழங்குடிச் சமூகங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நோக்கத்தில் கட்சி ஏழு தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தியது. எனினும், நான்கு தொகுதிகளில் வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டன. இறுதியில், அக்கட்சியின் சின்னத்தில் NCPI வேட்பாளர்கள் இரண்டு தொகுதிகளில் மட்டுமே போட்டியிட்டனர். அதில் போட்டியிட்ட சாவ்மானு (536 வாக்குகள்) மற்றும் கைலாஷஹர் (286 வாக்குகள்). மொத்தமாக அக்கட்சி 822 வாக்குகளை மட்டுமே பெற்றது.
திரிபுரா தேர்தல்களுக்குப் பிறகு உட்கட்சிப் பூசல்கள் வெடித்ததாகவும், நிதி தொடர்பான கருத்து வேறுபாடுகள் அமைப்பின் செயல்பாடுகளை முடக்கியதாகவும் கூறப்படுகிறது.

20 TMC MPS
பின்னர், போதிய பணம் இல்லாததால் 2026-ஆம் ஆண்டு நடைபெற்ற மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலுக்குத் தயாராக முடியவில்லை என்று கூறப்படுகிறது. அரசியல் ரீதியாகக் குறைந்த அளவிலான செல்வாக்கையே கொண்டிருந்தாலும், மக்களவையில் உள்ள திரிணமூல் எம்.பி.க்களில் மூன்றில் இரண்டு பங்குக்கும் அதிகமானோரைக் கொண்ட ஒரு குழுவுடன் தற்போது NCPI தன்னை இணைத்துக்கொண்டுள்ளது. இந்த இணைப்பு NCPI-ஐ தேசிய அளவில் கவனத்தை ஈர்க்கும் நிலைக்குக் கொண்டு வந்துள்ளது.
