இவர், 2024-ஆம் ஆண்டு பாரிஸ் ஒலிம்பிக்கில் இரண்டு பதக்கங்களை வென்று சாதனை படைத்த மனு பாகர் முதல் ராணா சௌரப் சௌத்ரி, அனிஷ் பன்வாலா மற்றும் சிங்கி யாதவ் வரை உள்ளிட்ட பல வீரர்களை உருவாக்கியவர் ஆவார்.
புகழ்பெற்ற இந்திய துப்பாக்கிச் சுடுதல் பயிற்சியாளரும், ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் முன்னாள் வெற்றியாளருமான ஜஸ்பால் ராணா, இன்று தனது 49-ஆவது வயதில் காலமானார்.
இந்தியாவின் பிஸ்டல் துப்பாக்கிச் சுடுதல் வீரர்களுக்கான உயர் செயல்திறன் பயிற்சியாளராகப் பணியாற்றி வந்த ராணா, மியூனிக்கில் நடைபெற்ற ISSF உலகக் கோப்பைப் போட்டியில் பங்கேற்றுவிட்டு இந்தியா திரும்பினார். அப்போது அவருக்கு, மாரடைப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் இன்று காலமானார். ராணாவின் மரணம் இந்திய துப்பாக்கிச் சுடுதல் துறைக்கு ஒரு பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது. நாட்டின் மிகச் சிறந்த துப்பாக்கிச் சுடும் வீரர்களில் ஒருவராகவும், புகழ்பெற்ற பயிற்சியாளராகவும் திகழ்ந்த அவர், பல வீரர், வீராங்கனைகளை உருவாக்கியவர்.

இவர், 2024-ஆம் ஆண்டு பாரிஸ் ஒலிம்பிக்கில் இரண்டு பதக்கங்களை வென்று சாதனை படைத்த மனு பாகர் முதல் ராணா சௌரப் சௌத்ரி, அனிஷ் பன்வாலா மற்றும் சிங்கி யாதவ் வரை உள்ளிட்ட பல வீரர்களை உருவாக்கியவர் ஆவார். குறிப்பாக, போட்டித் துப்பாக்கிச் சுடுதலில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, ராணா பயிற்சியாளர் பணிக்கு மாறி, 2012-இல் தேசிய அணியில் சேர்ந்தார். இளையோர் திட்டத்தில் அவரது பதவிக்காலம், சர்வதேசப் போட்டிகளில் இந்தியாவிற்குத் தொடர்ந்து வெற்றிகளைப் பெற்றுத் தந்தது. அதன் பலனாக, இந்திய தேசிய துப்பாக்கிச் சங்கம் (NRAI), 2025 பிப்ரவரியில் ராணாவை 25 மீட்டர் பிஸ்டல் பிரிவிற்கான உயர் செயல்திறன் பயிற்சியாளராக நியமித்தது. பயிற்சியில் அவர் ஆற்றிய பங்களிப்பிற்காக, மத்திய அரசு அவருக்கு துரோணாச்சார்யா விருது வழங்கி கெளரவித்தது. தவிர, அர்ஜுனா மற்றும் பதமஸ்ரீ விருதுகளையும் அவர் பெற்றுள்ளார்.
1976-ஆம் ஆண்டு ஜூன் 28-ஆம் தேதி உத்தரகாண்டில் பிறந்த ராணா, 1994-ஆம் ஆண்டில் சர்வதேச அரங்கில் அறிமுகமானார். மிலனில் நடைபெற்ற உலக துப்பாக்கிச் சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில், அவர் இளையோர் பிரிவில் தங்கப் பதக்கம் வென்றார். தொடர்ந்து அதே ஆண்டின் பிற்பகுதியில், ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்றார்.

2006-ஆம் ஆண்டு தோஹாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் மூன்று தங்கப் பதக்கங்களை வென்றதுடன், உலக சாதனையையும் சமன் செய்தார். 1994, 1998, 2002 மற்றும் 2006 ஆகிய நான்கு காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளிலும், அவர் இந்தியாவின் மிகவும் நம்பகமான பதக்கப் போட்டியாளர்களில் ஒருவராகத் திகழ்ந்தார். தவிர, ஆசிய விளையாட்டு மற்றும் ஆசிய சாம்பியன்ஷிப் போட்டிகளிலும் அவர் பதக்கங்களை வாங்கிக் குவித்தார். 9 தங்கப் பதக்கங்கள் உட்பட 15 பதக்கங்களுடன், அவர் இந்தியாவின் மிகவும் வெற்றிகரமான காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளின் துப்பாக்கிச் சுடும் வீரராகத் திகழ்ந்த அவர் இன்று நம்மோடு இல்லை.
