இந்த சிகிச்சை முறையில், உடலுக்கு எந்தத் தீங்கும் ஏற்படுத்தாத வகையில் வைரஸ் மிகத் தீவிரமாகக் கட்டுப்படுத்தப்படுகிறது.
ஹெபடைடிஸ் பி வகை நோய் பாதிப்பிற்கு ஒரு புதிய மருந்து குறிப்பிடத்தக்க குணமடைதலை ஏற்படுத்தி உள்ளது ஆய்வில் தெரியவந்துள்ளது.
ஹெபடைடிஸ் பி என்பது கல்லீரலைப் பாதிக்கும் ஒரு வைரஸ் தொற்று ஆகும். இது, சில சமயங்களில் ‘ஹெப் பி’ என்றும் அழைக்கப்படுகிறது. இது கல்லீரலுக்கு நீண்டகாலம் நீடிக்கக்கூடிய பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். ஹெபடைடிஸ் பி கடுமையானதாகவோ அல்லது நாள்பட்டதாகவோ இருக்கலாம். இந்த நிலையில், ஹெபடைடிஸ் பி வகை நோய் பாதிப்பிற்கு ஒரு புதிய மருந்து குறிப்பிடத்தக்க குணமடைதலை ஏற்படுத்தி உள்ளது ஆய்வில் தெரியவந்துள்ளது. பெபிரோவிர்சன் (Bepirovirsen)என்ற புதிய மருந்தின் செயல்திறன் தொடர்பான ஆய்வு முடிவுகள் தி நியூ இங்கிலாந்து ஜர்னல் ஆஃப் மெடிசின் என்ற இதழில் வெளியிடப்பட்டுள்ளது.

ஆன்டிவைரல் சிகிச்சையுடன் 6 மாத காலத்திற்கு சோதனை முறையில் வழங்கப்பட்ட புதிய மருந்து சுமார் 20 விழுக்காடு நோயாளிகளிடம் குறிப்பிடத்தக்க குணமடைதலை ஏற்படுத்தியதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. இதன்படி, ஒரு குறிப்பிட்ட கால சிகிச்சைக்சைக்குப் பின் நோயாளி நோய்க்கான மருந்துகளை உட்கொள்வதை நிறுத்திவிடலாம். நோயாளியின் உடலே இயற்கையாக ஹெபடைடிஸ் பிவைரஸை கட்டுக்குள் வைத்திருக்கும். இந்த சிகிச்சை முறையில், உடலுக்கு எந்தத் தீங்கும் ஏற்படுத்தாத வகையில் வைரஸ் மிகத் தீவிரமாகக் கட்டுப்படுத்தப்படுகிறது. இந்தியாவில் சுமார் 4 கோடி பேர் தீராத ஹெபடைடிஸ் பி பாதிப்புடன் வாழ்வோராக உள்ளனர். இந்நிலையில் புதிய கண்டுபிடிப்பு சிகிச்சை முறையில் புதிய முன்னேற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
