பொதுவாக நுரையீரல் புற்றுநோய் சிகிச்சையின் போது ஆன்டிபயாடிக் மருந்துகளை செலுத்த 2 – 3 மணி நேரம் எடுத்துக் கொள்ளும் நிலையில், ரோச் ஃபார்மா இந்தியா என்னும் நிறுவனம் 7 நிமிடங்களில் செலுத்தக்கூடிய நுரையீரல் புற்றுநோய் ஊசியை அறிமுகப்படுத்தியுள்ளது.
Summary
நுரையீரல் புற்றுநோய் இந்தியாவில் வேகமாக அதிகரித்து வரும் நிலையில், டெசென்ட்ரிக் என்ற புதிய மருந்து சிகிச்சை முறையாக அறிமுகமாகியுள்ளது. இதுவரை 1-3 மணி நேரம் எடுத்துக் கொண்ட கீமோதெரபிக்கு மாற்றாக, தோலுக்குக் கீழ் செலுத்தப்படும் இந்த ஊசி 7 நிமிடங்களில் சிகிச்சையை முடிக்கிறது.
புற்றுநோய் என்பது உலகின் கொடிய நோய்களில் ஒன்றாக பரவி வருகிறது. குறிப்பாக, இந்தியாவில் ஒரு முக்கியப் பிரச்னையாக உருவெடுத்திருக்கிறது. அதேபோல, ஒவ்வொரு ஆண்டும் 80,000 அதிகமானோர் நுரையீரல் புற்றுநோயால் மட்டும் பாதிக்கப்படுகின்றனர். அவர்களில் பாதிக்கும் அதிகாமானோர் நோய் முற்றிய நிலைகளிலேயே மருத்துவமனைகளுக்கு வருவதாகவும், அவர்களில் பெரும்பாலோனோர் அதிக பணிச்சுமை கொண்ட அரசு மருத்துவமனைகளுக்கே செல்வதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

புற்றுநோய்
இந்தசூழலில், புற்று நோய் பாதிப்புகளுக்கு தற்போது கீமோதெரபி சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த சிகிச்சை 1 – 3 மணி நேரம் வரை செலவிடப்படுகிறது. இந்நிலையில் தான், டெசென்ட்ரிக் என்று அழைக்கப்படும் மருந்தை ‘ரோச் பார்மா இந்தியா’ நிறுவனம் அறிமுகப்படுத்தியிருக்கிறது. மருத்துவமனையில் பல மணி நேரம் எடுக்கக்கூடிய வழக்கமான நரம்பு வழி சிகிச்சையைப் போலல்லாமல், இந்த முறையில் நேரடியாக தோலுக்கு அடியில் மருந்துகள் செலுத்தப்படுகிறது. இதற்கு, வெறும் 7 நிமிடங்கள் மட்டுமே ஆகும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இது இந்தியாவில் நுரையீரல் புற்றுநோய் சிகிச்சைக்கான மைல் கல்லாக பார்க்கப்படுகிறது.
நம் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு மண்டலத்தை தூண்டி, புற்றுநோய் செல்களை அழிக்க இந்த மருந்து உதவும். இந்த ஊசிக்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு வாரியம் தற்போது ஒப்புதல் அளித்துள்ள நிலையில், இந்த ஊசியின் மூலம் சிகிச்சை நேரம் 80% அளவிற்கு குறையும் என்பதால், மருத்துவமனையில் நீண்ட நேரம் நோயாளிகள் காத்திருக்க வேண்டிய அவசியம் இருக்காது. எனினும், இந்த மருந்தின் விலையே இதன் சவாலாக பார்க்கப்படுகிறது. இந்த மருந்தை ஒரு டோஸ் எடுத்துக் கொள்ள 3.6 லட்சம் ரூபாய் தேவைப்படும். இந்த சிகிச்சையின் போது 3 – 6 டோஸ்கள் வரை எடுத்துக் கொள்ள வேண்டி வரும் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
