கேரளா, புதுச்சேரி, அசாம் மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் தொடங்கி வரும் நிலையில், 11 மணி வரையிலான வாக்குப்பதிவு நிலவரம் தற்போது வெளியாகியிருக்கிறது.
தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்குவங்கம் மற்றும் அசாம் ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தலை இந்திய தேர்தல் ஆணையம் கடந்த மார்ச் மாதம் 15-ம் தேதி வெளியிட்டது. அதன்படி, தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 23-ம் தேதி ஒரே கட்டமாகவும், மேற்கு வங்கம் சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 23 மற்றும் ஏப்ரல் 29 ஆகிய தேதிகளில் இருகட்டமாகவும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து, புதுச்சேரி, கேரளா மற்றும் அசாம் ஆகிய மாநிலங்களுக்கான தேர்தல் ஏப்ரல் 9 ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது.

தேர்தல் ஆணையம்
அதன்படி, இன்று காலை 7 மணிக்கு, அசாம், கேரளா புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் வாக்குப்பதிவு தொடங்கி நடந்து வருகிறது. வாக்குப்பதிவு மாலை 6 மணிவரை நடைபெறவுள்ள நிலையில், தற்போது 11 மணி வரையிலான வாக்குப்பதிவு நிலவரம் வெளியாகியிருக்கிறது.
140 சட்டப்பேரவைத் தொகுதிகள் கொண்ட கேரளாவில், 2.71 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இந்த நிலையில், 11 மணி நேர நிலவரப்படி, 32.60% வாக்குகள் அங்கு பதிவாகி இருக்கிறது. தொடர்ந்து, 126 தொகுதிகளைக் கொண்ட அசாமில் 2.49 கோடி வாக்காளர்கள் வாக்காளர்கள் உள்ள நிலையில், 11 மணி நேர நிலவரப்படி 37.98% சதவீத வாக்கு பதிவாகியிருக்கிறது. அடுத்து, 30 தொகுதிகளைக் கொண்ட புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் 9.50 லட்சம் வாக்களர்கள் உள்ளனர். இங்கு 11 மணி நேர நிலவரப்படி 37.70 வாக்குகள் பதிவாகியுள்ளது.
2021 சட்டப்பேரவைத் தேர்தலில் கேரளா, அசாம், புதுச்சேரி ஆகிய மாநிலங்கள் முறையே, 74.06%, 82.04%, 81.27% வாக்குகள் பதிவாகியிருந்தது குறிப்படத்தக்கது.
