திருநெல்வேலி பாளையங்கோட்டையில் நாளை தவெக தலைவர் விஜயின் பரப்புரை நடைபெறவிருக்கும் சூழலில், அக்கட்சியின் மாநில நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் பரப்புரை நடைபெறும் இடத்தை இன்று பார்வையிட்டார்.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 23 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறவிருக்கிறது. திமுக, அதிமுக, நாதக ஆகிய கட்சிகள் ஏற்கனவே களத்தில் உள்ள சூழலில், புதிதாக ஆரம்பிக்கப்பட்ட தமிழக வெற்றிக் கழகம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அக்கட்சியின் தலைவர் விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிடவுள்ளார். ஏற்கனவே, தவெக பரப்புரைக்கு காவல்துறை அனுமதி கொடுக்க மறுக்கிறது என அக்கட்சியின் தொண்டர்கள் தொடர்ந்து கூறி வந்த நிலையில், தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலானதற்குப் பிறகு, விஜய் தமிழகம் முழுவதும் பரப்புரையில் ஈடுபடுவார் எனக் கூறிவந்தார்.

விஜய்
ஆனாலும், தற்போது வரை திருச்சி மற்றும் சென்னையில் உள்ள பெரம்பூர் மற்றும் கொளத்தூர் தொகுதிகளில் மட்டுமே பரப்புரை மேற்கொண்டுள்ளார். அதேபோல, தி.நகர், வில்லிவாக்கம் உள்ளிட்ட தொகுதிகளில் விஜய் பரப்புரை மேற்கொள்ள அனுமதி கொடுக்கப்பட்டும் அதிகப்படியான நிபந்தனைகள் காரணமாக தவெக தரப்பில் இருந்து அப்பரப்புரை ரத்து செய்யப்பட்டிருந்தது. தொடர்ந்து இன்று சைதாப்பேட்டையில் நடைபெறவிருந்த விஜயின் பரப்புரை ரத்து செய்யப்பட்டிருக்கிறது. இந்த சூழலில் தான், நாளை திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் விஜய் பரப்புரையில் ஈடுபடவுள்ளார். இக்கூட்டத்தில், நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களின் தவெக வேட்பாளர்களை ஆதரித்து விஜய் பரப்புரை மேற்கொள்கிறார்.
இதற்காக, காவல்துறையிடம் அனுமதி கேட்கப்பட்டிருந்த நிலையில், 51 நிபந்தனைகளுடன் அனுமதி அளிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இந்த சூழலில் தான், தவெக மாநில நிர்வாகக்குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன், நெல்லையில் பரப்புரை மேற்கொள்ளும் இடத்தைப் பார்வையிட்டார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், ”பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்தில் குடிநீர், ஆம்புலன்ஸ், பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்யப்பட்டு வருகிறது.
செங்கோட்டையன்
பொதுக் கூட்டத்திற்கு தொண்டர்கள் இளைஞர்கள் பொதுமக்கள் விதிமுறைகளுக்கு உட்பட்டு வருகை தருவார்கள். பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய பிறகு தாழையூத்து, தச்சநல்லூர், வண்ணாரப்பேட்டை, பாளை மார்க்கெட், சமாதானபுரம், நீதிமன்றம் வழியாக மீண்டும் கேடிசி நகரை வரை ரோடு ஷோ நடைபெறும். அங்கிருந்து கார் மூலம் தூத்துக்குடி செல்கிறார். எங்களுக்கு 51 நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. காவல்துறை விதித்துள்ள அனைத்து நிபந்தனைகளும் முழுமையாக பின்பற்றப்படுகின்றன” எனத் தெரிவித்துள்ளார்.
