ஈரான் மீது அமெரிக்கா தரைவழித்தாக்குதலை திட்டமிட்டுள்ள நிலையில், ஈரானும் அதற்கு தயாராகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது..
Summary
ஈரான், இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இடையிலான போர் 4 வாரத்தை கடந்திருக்கும் சூழலில், மத்திய கிழக்கில் தொடர்ந்து போர் பதற்றம் நிலவி வருகிறது. அதேசமயம், ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்திவருவதாகவும், அவர்கள் பிச்சை எடுக்கிறார்கள், 10 நாட்களுக்கு ஈரான் மீதான தாக்குதலை நிறுத்தப்போவதாகவும் டிரம்ப் தெரிவித்தார். ஆனால், ஈரான் வெளியுறவு அமைச்சகம் அமெரிக்காவுடன் எந்தவொரு நேரடிப் பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை என்று திட்டவட்டமாக மறுத்தது.

ஈரான், அமெரிக்கா
டிரம்பின் கூற்றுக்கள் அப்பட்டமான பொய் என்றும், இது அமெரிக்காவின் பலவீனத்தையே காட்டுவதாகவும் ஈரான் விமர்சித்த நிலையில், ஈரான் மீது தரை வழித்தாக்குதலை நடத்த கூடுதலாக 10 ஆயிரம் ராணுவ வீரர்களை மேற்காசிய நாடுகளுக்கு அமெரிக்க அனுப்பவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தசூழலில் தான் அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஈரான் 10 லட்சம் வீரர்களை தயார்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளது.
10 லட்சம் படையினர் தயார்..
மேற்காசியாவில் போர் பதற்றம் உச்சத்தை எட்டியுள்ள நிலையில், ஈரானுக்கு எதிராக தரைப்படை வீரர்கள் 10 ஆயிரம் பேரை அனுப்ப அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானது. இதுதொடர்பாக அமெரிக்க பாதுகாப்புத் துறையுடன் ஆலோசனை மேற்கொண்டுவரும் நிலையில், அடுத்த வாரம் இறுதி முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே, பேச்சுவார்த்தைக்காக ஈரானுக்கு 10 நாட்கள் அவகாசம் வழங்கியுள்ள ட்ரம்ப், ஏப்ரல் 6ஆம் தேதி வரை எரிசக்தி நிலையங்கள் மீதான தாக்குதலை நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளார்.

ஈரான் – அமெரிக்கா
இந்தசூழலில் அமெரிக்காவின் தரைவழித் தாக்குதலை எதிர்கொள்ள, ஈரான் 10 லட்சம் வீரர்களைத் திரட்டி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேற்காசியப் போரின் அடுத்தகட்டமாக, ஈரானின் தெற்குப் பகுதியில் அமெரிக்கா தரைவழித் தாக்குதலைத் தொடங்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இதை எதிர்கொள்ள, 10 லட்சத்திற்கும் அதிகமான படையினரை ஈரான் களம் இறக்கி வருவதாக அந்த நாட்டின் ‘டான்சிம்’ (Tasnim) செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், பல்லாயிரக்கணக்கான இளைஞர்களைப் புதியதாக ராணுவத்தில் சேர்க்கவும் ஈரான் அரசு திட்டமிட்டுள்ளது.
