யாழ்ப்பாணத்தில் ஒரு நூலகம் எரிக்கப்பட்டது. உலகில் வேறு எங்காவது இப்படி ஒரு நூலகம் எரிக்கப்பட்டிருந்தால் 100 – 500 படங்கள் வந்திருக்கும். ஆனால் தமிழில் ஒரு படம் கூட வரவில்லை.
Summary
திரைப்படம் வழியிலான இஸ்ரேல்–பாலஸ்தீன் கருத்தியல் போராட்டம் இருவேறு வடிவம் உடையது. ஒரு பக்கம் யூதர்கள் எடுக்கும் பிரம்மாண்ட படங்கள், துரந்தர் போன்றவை. இன்னொரு பக்கம் பாலஸ்தீன் எடுக்கக்கூடிய குட்டி குட்டியான மனிதத்தை பேசும், அன்பை பேசும் படங்கள். இன்று படைப்பாளிகளுக்கு இருக்கும் மிக முக்கியமான கடமை, வெறுப்புக்கு எதிராக மனிதத்தை பேசுவதுதான் என்று இயக்குநர் ராஜூ முருகன் பேசியுள்ளார்.
சோமீதரன் இயக்கத்தில் நவீன் சந்திரா, சனந்த், ரூபா, விது, சிந்து குமரேசன் எனப் பலரும் நடித்துள்ள படம் `நீளிரா’. இப்படம் ஏப்ரல் 3ம் தேதி வெளியாகவுள்ள நிலையில் படத்திற்கான செய்தியாளர் சந்திப்பு நேற்று இரவு நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசிய இயக்குநர் ராஜூ முருகன் “மிக முக்கியமான போர் சூழலில் நாம் இருக்கிறோம். ஒரு போர் எப்படி நடக்கிறது என்றால் நாம் பார்க்கும் ஏவுகணைகள், குண்டு வெடிப்புகள், ஆயுதங்கள் இது ஒரு பக்கம். இன்னொரு பக்கம் சத்தமில்லாமல் ஒரு கருத்தியல் போர் நடக்கிறது. அதை தான் மிக முக்கியமான விஷயமாக நான் பார்க்கிறேன். முதலில் கருத்தியல் போர் அதன் பிறகு தான் அணுகுண்டு போர். இஸ்ரேல் என்ற தேசம் எப்படி உருவானது என்ற உண்மைக்கதை ஒன்று இருக்கிறது. பாலஸ்தீனத்தின் நிலப்பரப்பை ஆக்கிரமித்து இஸ்ரேல் என்ற தேசம் கட்டமைக்கப்படுகிறது. அதை செய்வது உலகம் முழுக்க இருக்கும் யூத முதலாளிகள். இணைந்து அமைத்திருக்கும் Zionist அமைப்பு. அந்த அமைப்பு கிட்டத்தட்ட 150 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்கெனவே இருக்கும் பாலஸ்தீன நாட்டுக்குள் இஸ்ரேலை உருவாக்க, கதைகளை தயாரிக்கிறார்கள்.

நீளிரா
1990களில் யூத முதலாளிகள் செய்த முதல் விஷயம், ஒரு வங்கியை உருவாக்கியது. அந்த வங்கியை பாலஸ்தீன நாட்டில் சென்று அமைக்கிறார்கள். அங்கிருக்கும் ஏழை விவசாயிகளுக்கு அவர்களுடைய நிலத்தின் பெயரில் கடன் கொடுக்கிறார்கள். அவர்களால் கடனை கட்ட முடியவில்லை என்ற சூழல் வரும் போது, வட்டி பெருகி அதன் பொருட்டு அந்த நிலத்தை வாங்கி பறித்துக் கொள்ளும். இப்படித்தான் இஸ்ரேலின் பாதி நிலம் உருவாக்கப்பட்டது. அப்படி ஒரு தேசத்தை உருவாக்க முதல்கட்டமாக வங்கியை உருவாக்கிய அந்த யூத முதலாளிகள், இரண்டாவதாக செய்த விஷயம் திரைப்பட கழகத்தை உருவாக்கியது. அவர்கள் ரொம்ப தெளிவாக 100 வருடங்களுக்கு முன்பே உணர்ந்த விஷயம், ஒரு தேசத்தை உருவாக்க வேண்டும், ஒரு கருத்தியலை பரப்ப வேண்டும், யுத்தத்தை நடத்த வேண்டும் என்றால், பணத்திற்கு பிறகு, அடுத்து தேவைப்படுவது கலை. அப்படி 1913ல் அமையவிருக்கிற இஸ்ரேல் தேசத்தை பற்றி அவர்கள் ஒரு ஆவணப்படம் எடுக்கிறார்கள். அந்த ஆவணப்படம் `ஏன் பாலஸ்தீனத்தில் இஸ்ரேலை உருவாக்க வேண்டும்?’ என சொல்லுவதாக இருக்கிறது. அன்றிலிருந்து, இன்றுவரை தொடர்ந்து இஸ்ரேல் யூத அமைப்புகள் திரைப்படங்களை எடுத்துக் கொண்டே இருக்கிறார்கள். அதன் மூலம் ஒரு நரேட்டிவை செட் பண்ணுகிறார்கள்.
1948ல் இஸ்ரேல் என்ற தேசம் பிறந்த பிறகு அவர்கள் செய்த முதல் விஷயம், இராணுவத்தில் திரைப்பட பிரிவை உருவாக்குகிறார்கள். ஒரு பக்கம் ஆயுதப்பயிற்சி, இன்னொரு பக்கம் திரைப்பட கருவிகளை வைத்து அங்கிருக்கும் இளைஞர்களுக்கு திரைப்படம் உருவாக்குவதற்கான பயிற்சி இதை இரண்டையும் கொடுக்கிறார்கள். இதற்கு எதிராக பாலஸ்தீனம் என்ன செய்கிறது என்றால், அங்கிருந்து நிறைய சுயாதீன இயக்குநர்கள் கிளம்பி வருகிறார்கள். அவர்களுக்கு அதிகாரம் கிடையாது. ஆனால் 40களில் இருந்தே தங்களால் முடிந்த சின்னச் சின்ன கேமிராவை வைத்து அழகான படங்களை உருவாக்குகிறார்கள். ஒரு பக்கம் யூதர்கள் எடுக்கும் பிரம்மாண்ட படங்கள், துரந்தர் போன்றவை. இன்னொரு பக்கம் பாலஸ்தீன் எடுக்கக்கூடிய குட்டி குட்டியான மனிதத்தை பேசும், அன்பை பேசும் படங்கள். இந்த இரண்டும் கிட்டத்தட்ட நூறு வருடங்களாக கருத்தியல் யுத்தத்தை அந்த நிலத்தில் உருவாக்கிக் கொண்டே இருக்கிறது.
அதேபோல தான் உலகம் முழுவதும். அமெரிக்க குடியரசு உருவான போதும் இப்படிப்பட்ட திரைப்படங்கள் உருவாக்கப்பட்டது. ஈரான் ஏராளமான படங்களை இந்த உலகிற்கு தங்களது கலாச்சார பண்பாட்டு தளங்களை பிரதிபலிக்கும் வகையில் தந்திருக்கிறது. ஆனால் உலகத்தின் முன்னோடி மொழியாக சொல்லக்கூடிய தமிழில் அப்படியான படங்கள் வரவே இல்லை. குறிப்பாக ஈழத்தில் இருந்து. ஈழத்தின் போராட்டம் என்பது உலகமே திரும்பிப் பார்த்த 50 ஆண்டு போராட்டம். யாழ்ப்பாணத்தில் ஒரு நூலகம் எரிக்கப்பட்டது. உலகில் வேறு எங்காவது இப்படி ஒரு நூலகம் எரிக்கப்பட்டிருந்தால் 100 – 500 படங்கள் வந்திருக்கும். ஆனால் தமிழில் ஒரு படம் கூட வரவில்லை. அதற்கு முக்கியமான காரணமாக நான் நினைப்பது, ஒன்று தணிக்கைக்குழு அரசியல் காரணங்கள், இரண்டாவது அடிப்படையிலேயே படைப்பாளிகளுக்கு இருக்கக்கூடிய இறக்குமதி சிந்தனை, மூன்றாவது இங்கிருக்கக்கூடிய வியாபார சந்தை.

நீளிரா
இதைத்தாண்டி இவ்வளவு பெரிய போர் நடந்த ஈழத்திலிருந்து ஒரு படம் கூட வரவில்லையே என்ற வருத்தம் என்னைப் போல நிறைய பேருக்கு உள்ளது. அதனை உடைக்கக்கூடிய முதல் படமாக நீளிரா இருக்கிறது. அதனால் சோமீ தரனுக்கு நான் சொல்லும் நன்றி என்னவென்றால், உலகம் முழுக்க இன்று இருக்கும் போர் சூழலில், ஈழ சினிமா என்ற ஒரு வகையை ஏற்படுத்தியதற்கு. ஜான் மகேந்திரன் போன்றோர் சில எடுத்திருந்தாலும், மார்டன் சினிமாவில் மிக நேர்த்தியாக எடுக்கப்பட்ட முதல் ஈழ சினிமா என்று இதனை சொல்வேன். சோமீ தரனை அவர் யாழ்ப்பாண நூலக எரிப்பை பற்றி எடுத்த ஆவணப்படத்தின் மூலம் தான் எனக்கு தெரியும். அதிலிருந்து மிக வலிமையாக தனது எழுத்தின் மூலமாகவும், கேமரா மூலமாகவும் ஈழத்தை இந்த உலகிற்கு தெரியப்படுத்த இயங்குகிறார். அதன் உச்சமாக நீளிராவை எடுத்திருக்கிறீர்கள். இந்தப் படம் பற்றி மிக முக்கியமாக சொல்ல வேண்டியது என்ன என்றால் இது யுத்தத்தை பற்றி பேசுகிறது, ஆனால் இப்படத்தில் ஒரு வன்முறை காட்சி கூட இல்லை. மேலும் இந்தப் படம் எதன் மேலும் வெறுப்புணர்வை உண்டாக்கவில்லை. அது மிக முக்கியம். ஏனென்றால் இன்று படைப்பாளிகளுக்கு இருக்கும் மிக முக்கியமான கடமை, வெறுப்புக்கு எதிராக மனிதத்தை பேசுவதுதான்.” என்றார்.
