13 ஆண்டுக்குப் பிறகு திமுக மீண்டும் ஆட்சிக் கட்டில் ஏறிய தேர்தல்.. எம்ஜிஆர் மறைவுக்கு பின் நடந்த முதல் தேர்தல்.. என பல்வேறு வகைகளில் முக்கியத்துவம் பெற்றது 1989 சட்டமன்றத் தேர்தல். அந்த தேர்தலில் கவனம் ஈர்த்த அம்சங்கள் பற்றி தற்போது பார்ப்போம்..
Summary
13 ஆண்டுக்குப் பிறகு திமுக மீண்டும் ஆட்சிக் கட்டில் ஏறிய தேர்தல்…எம்ஜிஆர் மறைவுக்கு பின் நடந்த முதல் தேர்தல்… என பல்வேறு வகைகளில் முக்கியத்துவம் பெற்றது 1989 சட்டமன்றத் தேர்தல்.
1987இல் எம்ஜிஆர் காலமான பிறகு அதிமுக ஜானகி அணி, ஜெயலலிதா அணி என இரண்டாக உடைந்தது. இதில் எம்ஜிஆர் மனைவி வி.என்.ஜானகி முதல்வரானார். சில வாரங்களில் சட்டமன்றத்தில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் பெரும் அமளி ஏற்பட்டது. இதன் பின் சட்டம் ஒழுங்கு, அரசியல் ஸ்திரத்தன்மையை காரணம் காட்டி ஜானகி ஆட்சி கலைக்கப்பட்டது. இதன் பின் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலாக்கப்பட்டது. ஒராண்டுக்கு பின் சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டது.
தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகம்
திமுக தலைமையிலான அணியில் மார்க்சிஸ்ட், ஜனதா தளம் கட்சிகள் இடம் பெற்றன. அதிமுகவில் ஜெயலலிதா தலைமையிலான அணி சேவல் சின்னத்திலும் ஜானகி தலைமையிலான அணி இரட்டைப்புறா சின்னத்திலும் போட்டியிட்டன. சிவாஜி கணேசன் தலைமையிலான தமிழக முன்னேற்ற முன்னணி ஜானகி அணியை ஆதரித்தது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஜெயலலிதா தலைமையிலான அணியை ஆதரித்தது. காங்கிரஸ் கட்சி ஐக்கிய பொதுவுடமை கட்சி, இந்திய முஸ்லீம் லீகுடன் கைகோத்து களம் கண்டது. தமிழகத்தில் 1977க்கு பின் இரட்டை இலை சின்னம் இன்றி நடந்த ஒரே தேர்தல் இதுதான். திமுக 202 இடங்களில் போட்டியிட்டது. அக்கட்சி 200 தொகுதிகளுக்கு மேல் தனித்து போட்டியிட்ட 3 தேர்தல்களில் இதுவும் ஒன்று.

திமுக 150 இடங்களில் வென்று ஆட்சியமைத்தது. ஜெயலலிதா அணி 27 இடங்களிலும் காங்கிரஸ் 26 இடங்களிலும் வெற்றிபெற்றன. ஜானகி அணி ஒரே ஒரு இடத்தில் மட்டும் வென்றது. சிவாஜியின் தமிழக முன்னேற்ற முன்னணி போட்டியிட்ட 49 இடங்களிலும் தோல்வியடைந்தது. மு. கருணாநிதி சென்னை துறைமுகம் தொகுதியிலும் ஜெயலலிதா போடி நாயக்கனூர் தொகுதியிலும் கருப்பையா மூப்பனார் பாபநாசம் தொகுதியிலும் வெற்றிபெற்றனர். ஜானகி ஆண்டிபட்டி தொகுதியிலும் சிவாஜி கணேசன் திருவையாறு தொகுதியிலும் தோல்வியடைந்தனர். மு.க.ஸ்டாலின் ஆயிரம் விளக்கு தொகுதியில் தனது முதல் சட்டமன்றத் தேர்தல் வெற்றியை பதிவு செய்தார். 13 ஆண்டு இடைவெளிக்கு பிறகு முதலமைச்சர் ஆனார் மு.கருணாநிதி
