இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவின் ஏஐ வீடியோ வெளியானதாக தகவல் பரவியதை அடுத்து, பொதுமக்களுடன் தாம் உரையாடுவது போன்ற வீடியோவை வெளியிட்டு, “இது நிஜம்தான்” என்று பதிவிட்டுள்ளார்.
ஈரான், இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இடையேயான போரின் முதலாவது நாளிலேயே 35 ஆண்டு காலம் ஈரானை ஆட்சி செய்து வந்த உச்சத்தலைவர் அயதுல்லா காமேனி கொல்லப்பட்டார். அதைத் தொடர்ந்து, அவரின் மகன் மொஜ்தபா ஈரானின் புதிய உச்சத் தலைவராக பதவியேற்றுள்ளார். இந்நிலையில், அயதுல்லாவின் கொலைக்கு பதிலடித் தரப்போவதாக கூறிய ஈரான் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்கா ரணுவத் தளவாடங்கள் மற்றும் இஸ்ரேல் மீது தாக்குதலை நடத்தி வருகிறது. அதேசமயம், இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் கூட்டுத்தாக்குதலும் ஈரான் மீது தொடர்ந்து வருகின்றன.

ஈரான் மீது சேர்ந்து தாக்குதல் நடத்தும் இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா
இந்த சூழலில், இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய தாக்குதலில், நெதன்யாகு உயிரோடு இருக்கிறாரா? இல்லையா எனத் தெரியவில்லை என ஈரான் ராணுவம் தெரிவித்தையடுத்து, இது தொடர்பான சந்தேகங்கள் சமூக ஊடகங்களில் பரவின. தொடர்ந்து, மார்ச் 13 ஆம் தேதி இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு பேசிய ஈரான் தொடர்பான உரையில், அவரது கையில் 6 விரல் இருப்பது போன்ற தோற்றம் வெளியானது. இது ஏஐ-யால் உருவாக்கப்பட்ட வீடியோ போல் இருக்கிறது என கருத்துக்கள் வெளியான நிலையில், அவர் உயிருடன் இல்லை என்ற கருத்துக்கள் தீவிரமான பரவின. இதற்கு விளக்கம் அளிக்கும் வகையில், நேற்றைய முன் தினம் நெதன்யாகு தனது எக்ஸ் தளத்தில் ஒரு காணொளி ஒன்றை பகிர்ந்தார். அதில், தான் உயிருடன் தான் இருக்கிறேன். காபிக்காக இறந்துகொண்டிருக்கிறேன் எனவும் தனக்கு 5 விரல்கள் மட்டுமே இருக்கின்றன எனவும் நகைச்சுவையாக சுட்டிக்காட்டினார்.

ஆனால், இந்த வீடியோவிலும் அவர் பேசுவது இயல்பாக இல்லை. காபி கப்-இல் காபி குறையவில்லை போன்ற காரணங்களைச் சுட்டிக்காட்டி இதுவும் ஏஐ-ஆல் உருவாக்கப்பட்ட வீடியோ போல இருக்கிறது என சந்தேகங்கள் எழத் தொடங்கின. இந்த சூழலில் தான், காபி ஷாப்பில் எடுக்கப்பட்ட வீடியோ, போலி என்ற கருத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக நேற்று ஒரு வீடியோவை தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். அதில், ஜெருசேலம் நகர வீதியில் இருந்தபடி பொதுமக்களிடம் நெதன்யாகு உரையாடுவது பதிவாகியிருந்தது.
அதில், ஈரான் மற்றும் லெபனான் உடனான போர் பதற்றம் காரணமாக, மக்கள் அனைவரும் அரசு வழங்கும் பாதுகாப்பு வழிமுறைகளைச் சரியாகப் பின்பற்ற வேண்டும் என்று பொதுமக்களிடம் வலியுறுத்துகிறார். மேலும் அதில், “ஜெருசலேம் எவ்வளவு அழகானது, இதற்கு நிகராக எதுவும் இல்லை” எனவும் அந்நகரின் அழகை வர்ணிப்பது போலவும் அந்த வீடியோவில் பதிவாகியிருக்கிறது. இந்த வீடியோ அவர், இறந்து விட்டார் என்ற வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையிலேயே பகிரப்பட்டிருக்கிறது. முன்னதாக, நெதன்யாகு உயிருடன் இருந்தால் அவரைக் குறிவைத்துக் கொல்வோம் என ஈரான் புரட்சிகர காவல் படை தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
