வெற்றி பெற்ற தொகுதியின் பெயரையே அடைமொழியாக பெற்றவர்கள் வரிசையில் அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி குறிப்பிடத்தக்கவர். 1989 – ஜெயலலிதா அணி சார்பில் எடப்பாடி தொகுதியில் சேவல் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்
Summary
தேர்தல் தேதி அறிவித்தது முதல் தமிழக தேர்தல் களம் பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் உள்ளது. முக்கிய தலைவர்கள் போட்டியிடும் தொகுதியின் வரலாறு, கள நிலவரம், மக்களின் எதிர்பார்ப்பு குறித்து நட்சத்திர தொகுதி பகுதியில் பார்த்து வருகிறோம். இப்போது அதிமுக பொதுச்செயலர் கே. பழனிசாமியின் எடப்பாடி சட்டமன்ற தொகுதி குறித்து பார்க்கலாம்.

கே. பழனிசாமி
வெற்றி பெற்ற தொகுதியின் பெயரையே அடைமொழியாக பெற்றவர்கள் வரிசையில் அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி குறிப்பிடத்தக்கவர். அதிமுகவில் 1989ஆம் ஆண்டு தொடங்கி கடந்த 2021 தேர்தல் வரை எடப்பாடியில் 7 முறை களம் கண்டு 5 முறை வெற்றி பெற்றுள்ளார் பழனிசாமி. அதிமுகவில் ஜெயலலிதா அணி, ஜானகி அணி என பிரிவு வந்தபோது1989ஆம் ஆண்டு ஜெயலலிதா அணி சார்பில் சேவல் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றதால் இவர் ‘எடப்பாடி’ பழனிசாமி என்று அடைமொழி பெற்றார்.
அதன் பிறகு 1991 தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்ற பழனிசாமி அதே தொகுதியில்1996, 2006 ஆகிய தேர்தல்களில் பாமக வேட்பாளர்கள் கணேசன், காவேரி ஆகியோரிடம் தோல்வியை தழுவினார். மீண்டும் 2011, 2016, 2021 சட்டமன்ற தேர்தல்களில் போட்டியிட்ட அவர் தொடர்ந்து ஹாட்ரிக் வெற்றிகளை வசமாக்கினார். எடப்பாடி தொகுதியை பொறுத்தவரை விவசாயம் மற்றும் நெசவு பிரதான தொழிலாக உள்ளது. பலதரப்பட்ட சமுதாயத்தினர் இத்தொகுதியில் வசித்து வந்த போதிலும் வன்னியர், கொங்கு வேளாள கவுண்டர் சமுதாயத்தினர் வெற்றியை நிர்ணயிக்கும் சக்தியாக உள்ளனர்.

EPS
வாக்காளர் பட்டியல் தீவிர சிறப்பு திருத்தப் பணிகளுக்கு பின்பு இறுதிப் பட்டியலில் எடப்பாடி தொகுதியில் 2.7 லட்சம் வாக்காளர்கள் இடம்பெற்றுள்ளனர். முன்னதாக, சுமார் 20 ஆயிரம் வாக்காளர்கள் நீக்கப்பட்டு சுமார் 7 ஆயிரம் வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.
சேலம் மாவட்டத்தின் ஒரு சாதாரண நகராட்சியாக இருந்த எடப்பாடி கடந்த 2011ஆம் ஆண்டுக்குப் பிறகு உட்கட்டமைப்பில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி பெற்றது. எடப்பாடியில் கிராம சாலைகள் மேம்பாடு, புறவழிச் சாலை, அரசு மருத்துவமனைக்கு புதிய கட்டடம், நவீன உபகரண வசதிகள், பேருந்து நிலையம் அருகே விரிவாக்கப்பட்ட பாலம், சரபங்கா ஆற்றின் குறுக்கே மூன்று புது பாலங்கள், வனவாசியில் அரசு தொழில்நுட்பக் கல்லூரி, எட்டிக்குட்டை மேட்டில் கல்வியியல் கல்லூரி, எடப்பாடியில் அரசு கலைக்கல்லூரி, சுகாதாரமான குடிநீர் திட்டம் உள்ளிட்ட பல திட்டங்கள் பழனிசாமி ஆட்சிக்காலத்தில் கொண்டு வரப்பட்டன.

கே. பழனிசாமி – அன்புமணி
அதே சமயம் ரயில்வே நிலையம் அமைக்க வேண்டும், தொழில் வளர்ச்சியை பெருக்கி, வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும், விடுபட்ட சாலைகளை அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளையும் தொகுதி மக்கள் முன்வைக்கின்றனர். தொகுதியில் குறிப்பிடத்தக்க செல்வாக்கு கொண்ட பாமகவை, அதிமுக கூட்டணியில் சேர்த்ததன் மூலம் தனது வெற்றிக்கு அடித்தளம் அமைத்திருக்கிறார் பழனிசாமி. ஆனாலும் பலமான திமுக கூட்டணி ஒரு புறமும், தவெக, நாம் தமிழர் போன்ற கட்சிகள் இன்னொரு பிறமும் வாள் சுழற்றுவதால் தேர்தல் களத்தில் அனல் வீசும் என எதிர்பார்க்கப்படுகிறது.
