பிராண்ட் மேலாளர் காவேரி பருவா என்பவர் ’ஸ்வீகிருதி டாக்ஸ்’ பாட்காஸ்டில் அளித்த பேட்டியில் நடிகர் அல்லு அர்ஜுனை சந்திக்கப் போகும்போது தனக்கு ஏற்பட்ட அனுபவத்தைப் பகிர்ந்திருந்தார்.
டோலிவுட்டின் முன்னணி நடிகர் அல்லு அர்ஜூன். அலா வைகுண்டபுரம், புஷ்பா இரு பாகங்களுக்குப் பிறகு இவரது மார்க்கெட் உச்சத்துக்கு சென்றுவிட்டது. தற்போது அவர், அட்லீ இயக்கத்தில் நடித்து வருகிறார், இதனை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்திலும் நடிக்கவுள்ளார். இந்த சூழலில் அல்லு அர்ஜுன் பற்றி பேட்டியில் ஒருவர் கூறிய விஷயம் சர்ச்சையாக, அதற்கு அல்லு அர்ஜுன் தரப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
பிராண்ட் மேலாளர் காவேரி பருவா என்பவர் ’ஸ்வீகிருதி டாக்ஸ்’ பாட்காஸ்டில் அளித்த பேட்டியில் நடிகர் அல்லு அர்ஜுனை சந்திக்கப் போகும்போது தனக்கு ஏற்பட்ட அனுபவத்தைப் பகிர்ந்திருந்தார். அதில் நடிகர் அல்லு அர்ஜுனை சந்திக்க வேண்டுமென்றால், 42 கடுமையான ரூல்ஸை (Do’s and Don’ts) பின்பற்ற வேண்டும் என அவர் குறிப்பிட்டார். அதில் ‘அவரின் கண்களைப் பார்க்காதீர்கள், அவருடன் கைகுலுக்காதீர்கள்’ உட்பட பல கட்டுப்பாடுகள் இருந்ததாக அவர் கூறி இருந்தார்.
மேலும் அவரிடமிருந்து மூன்றடி தூரம் தள்ளியே நிற்க வேண்டும், உங்களிடம் அவராக பேசும் வரை பேசக்கூடாது, சத்தம் எழுப்பும் அணிகலன்களை அணியக்கூடாது, மிக அதீத நறுமணம் தரக்கூடிய வாசனைத் திரவியங்களை பயன்படுத்தக் கூடாது, அவர் முன் நிற்கையில், உங்கள் கைகளை பாக்கெட்டுக்குள் வைக்கக் கூடாது… இப்படியாக பல நிபந்தனைகள் பரவிவரும் அந்த 42 கட்டளைகள் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.
நடிகர் அல்லு அர்ஜுனுக்கு இந்தியளவில் ரசிகர்கள் உள்ள நிலையில், பலத்த எதிர்ப்பு கிளம்பவே அதன் எதிர்வினையாக அந்த பேட்டி யூ-டியூபில் இருந்து நீக்கப்பட்டுவிட்டது. கூடவே பேட்டி கொடுத்த காவேரியின் இன்ஸ்டா பக்கம் டிஆக்டிவேட் செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி, பரவலான விவாதத்தைத் தூண்டியது.
மேலும் பேட்டி அளித்தவருக்கு அந்த பேட்டியை நீக்குமாறு மிரட்டல்கள் வந்ததாகவும், அதனால் அந்த பேட்டியை எடுத்த ஸ்வீகிருதி வீடியோவை நீக்குவதாகவும் ஸ்டோரி வைத்தார். இதை தாண்டி அல்லு அர்ஜுனை சந்திக்க 42 கட்டளைகள் என்ற ஒரு புகைப்படமும் இணையத்தில் உலவத்துவங்கியுள்ளது. இது உண்மையானதா என தெரியவில்லை என்றாலும், தொடர்ந்து அந்த பேட்டி அளித்த காவேரிக்கு எதிராக பல ரசிகர்களும் தங்கள் கருத்துக்களை பகிரத் துவங்கினர்.
சர்ச்சை பெரிதான நிலையில், அல்லு அர்ஜுனின் தரப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், “நடிகர் அல்லு அர்ஜுன் பற்றிய கருத்துகள் ஆதாரமற்றவை, உண்மைக்குப் புறம்பானவை. அவர் மிகுந்த கண்ணியத்துடன் நடப்பவர். இந்த பொய்யான குற்றச்சாட்டுகளை நாங்கள் தீவிரமாக எடுத்துக்கொண்டு, பொறுப்பானவர்கள் மீது அவதூறு வழக்கு நடவடிக்கை தொடங்கியுள்ளோம்” என்று குறிப்பிட்டுள்ளனர். இதுபோக அனைவரையும் சரிபார்க்கப்படாத தகவல்களைப் பரப்புவதைத் தவிர்க்குமாறு அதில் கேட்டுக்கொள்ளப்பட்டது. ஒரு பக்கம் அல்லு அர்ஜுனுக்கு ஆதரவாக பலர் குரல் எழுப்பினாலும், இன்னொரு பக்கம் அல்லு அர்ஜுன் பற்றி சில எதிர்மறை கருத்துகளையும் சிலர் சொல்லி வருகின்றனர்.
