சாத்தான்குளத்தைச் சேர்ந்த ஜெயராஜ் – பென்னிக்ஸ் கொலை வழக்கில், குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்ட 9 பேருக்கும் இன்று தண்டனை விவரம் அறிவிக்கபடும் என நீதிமன்றம் தெரிவித்திருந்த நிலையில், இந்த வழக்கு மீண்டும் தள்ளி வைக்கப்பட்டிருக்கிறது.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த வணிகர்களான தந்தை மகனான ஜெயராஜ் – பென்னிக்ஸ் கடந்த 2020ஆம் ஆண்டு ஜூன் 19ஆம் தேதி காவல்துறை விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், விசாரணையின்போது காவல்துறையினர் தாக்கியதில் இருவரும் கொடூரமான முறையில் உயிரிழந்தனர். காவல்துறையினர் தாக்கியதாலேயே இருவரும் பலியானதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
காவல் நிலைய மரணம்
இதனையடுத்து தந்தை-மகன் உயிரிழந்தது தொடர்பாக எழுந்த குற்றச்சாட்டின்கீழ் தொடரப்பட்ட வழக்கில், சாத்தான்குளம் காவல்நிலைய ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ் உள்ளிட்ட 9 பேரின் மீது சிபிஐ தரப்பில் முதற்கட்டமாக 2027 பக்கம் குற்றப்பத்திரிகையும், இரண்டாம் கட்டமாக கூடுதலாக 400 பக்கம் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது.
மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் 3 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வந்த இந்த வழக்கில், அனைத்து விசாரணைகளும் நிறைவடைந்த நிலையில், மார்ச் 23ம் தேதி தீர்ப்பு வழங்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள 9 பேரும் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. எனினும், இந்த வழக்குகளுக்கான தண்டனை விபரங்கள் பின்னர் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து, சிபிஐ மற்றும் மாநில அரசின் நிலைபாட்டை அறிக்கையாக தாக்கல் செய்யவும் உத்தரவிட்டிருந்தது.

ஜெயராஜ் – பென்னிக்ஸ்
இந்த சூழலில் தான், இதுதொடர்பான வழக்கு மார்ச் 30 அன்று மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில், சிபிஐ மற்றும் மாநில அரசு அவகாசம் கோரியது. இதையடுத்து, ஏப்ரல் 2-ம் தேதி (இன்று) நீதிமன்றம் ஒத்திவைத்தது. இதையடுத்து, இன்று குற்றம் சாட்டப்பட்ட காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உட்பட 9 காவல்துறையினரும் நீதிமன்றத்தில் ஆஜராகினர். அப்போது, குற்றவாளிகள் 9 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்குமாறு சிபிஐ தரப்பில் வாதிடப்பட்டது. அதேசமயம், திட்டமிட்டு இந்தக் கொலைகள் நடக்கவில்லை எனத் தெரிவித்து குறந்தபட்ச தண்டனை விதிக்குமாறு குற்றவாளிகள் தரப்பில் வாதிடப்பட்டது.
இந்த சூழலில் தான், ஏப்ரல் 6ஆம் தேதி தண்டனை விவரங்கள் அறிவிக்கப்படும் எனத் தெரிவித்து நீதிபதி இந்த வழக்கை ஒத்திவைத்திருக்கிறார். தண்டனை விவரங்கள் அறிவிப்பது ஏற்கனவே, ஒருமுறை ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று 2-வது முறையாக ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது.
