தமிழகத்தில் தேர்தல் நெருங்கும் நிலையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி 2ஆம் கட்ட தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் தேர்தல் நெருங்கும் நிலையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி 2ஆம் கட்ட தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்துள்ளார். அதில், முதியோருக்கு ஓய்வூதியம் உயர்வு, வங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி ஆகியன அடங்கும்.
தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஒருசில மாதங்களே உள்ளன. இதையடுத்து கட்சிகளில் கூட்டணி வேலைகளிலும், பிரசாரங்களிலும் தீவிரமாய் ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தற்போது இரண்டாவது கட்ட வாக்குறுதிகளை அறிவித்துள்ளார். அதன்படி,
1. முதியோர் உள்ளிட்டோருக்கான ஓய்வூதியம் 2000 ரூபாயாக உயர்த்தப்படும்,
2. வங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும். அத்தொகையை அரசே ஏற்கும்,
3. வாழ்வாதார உதவியாக குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆண்டுக்கு 3 கேஸ் சிலிண்டர்கள் விலையில்லாமல் வழங்கப்படும்,
4. ஜல்லிக்கட்டு விளையாட்டின்போது மாடுபிடி வீரர்கள் உயிரிழக்க நேரிட்டால், அவர்களது குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் வழங்கப்படும். படுகாயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சைக்காக 2 லட்சம் வழங்கப்படும்,
5. சிறுபான்மை வகுப்பைச் சேர்ந்த மகளிர் சுய தொழில் தொடங்குவதற்கு வட்டியில்லா கடன் வழங்கப்படும். மாற்றுத்திறனாளிகள் கூட்டுறவு வங்கிகளில் பெற்ற கடன் தள்ளுபடி செய்யப்படும் உள்ளிட்ட வாக்குறுதிகளை அறிவித்துள்ளார்.
முன்னதாக, அவர் தனது முதற்கட்ட வாக்குறுதியின்போது, அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும், ஒவ்வொரு மாதமும் உதவித் தொகையாக ரூபாய் 2,000/- வழங்கப்படும், நகரப் பேருந்துகளில் பயணம் செய்யும் ஆண்களுக்கு கட்டணமில்லா பேருந்து பயணத் திட்டம் செயல்படுத்தப்படும், ‘அம்மா இல்லம் திட்டம்’ மூலம், கிராமப்புறங்களில் குடியிருப்பதற்கு சொந்த வீடு இல்லாதவர்களுக்கு, அரசே இடம் வாங்கி கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும், 100 நாட்கள் வேலைவாய்ப்புத் திட்டம் 125 நாட்களாக உயர்த்தப்படும், மகளிருக்கு ரூ.25,000/- மானியத்துடன், 5 லட்சம் மகளிருக்கு அம்மா இருசக்கர வாகனங்கள் வழங்கப்படும் உள்ளிட்ட வாக்குறுதிகளை அளித்திருந்தார்.
