பெங்களூருவில் 24 வயது இளைஞனின் மரணம், முதலில் சாலை விபத்து என்று நம்பப்பட்டு, பின்னர் கொலை என தெரியவந்துள்ளது.
Summary
கர்நாடக மாநிலம் உத்தரஹள்ளியைச் சேர்ந்தவர் தர்ஷன் (24). டெலிவரி ஊழியராகப் பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில், கடந்த அக்டோபர் 25ஆம் தேதி, தனது நண்பர் வருணை அழைத்துக் கொண்டு ஜே.பி.நகர் ஸ்ரீராமா லே அவுட் அருகே, மோட்டார் சைக்கிளில் தர்ஷன் சென்று கொண்டிருந்தார். அந்தச் சமயத்தில் தம்பதியினர் ஒருவர் தங்கள் காரைச் சர்வீஸ் செய்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது எதிர் திசையில் வந்த தர்ஷனின் மோட்டார் சைக்கிள், அந்த காரின் வலதுபுறக் கண்ணாடியில் உரசியுள்ளது.
இதனால், இருதரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் கோபமடைந்த அந்த தம்பதியினர், அவர்களைத் துரத்திச் சென்று அந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியுள்ளனர். இதில் தலையில் பலத்த காயமடைந்த தர்ஷன், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது நண்பர் வருண் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுதொடர்பாக போலீசார், சாலை விபத்து என வழக்குப் பதிவு செய்துள்ளனர். ஆனால், பின்னர் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த பிறகு, இது வேண்டுமென்றே நடத்தப்பட்ட தாக்குதல் என்பதை போலீசார் உறுதி செய்தனர். அவர்கள், விபத்துக்குப் பிறகு முகமூடி அணிந்து சம்பவ இடத்தில் ஆதாரங்களை அழிக்க முயன்றுள்ளனர்.
அந்த சம்பவங்களும் சிசிடிவி காட்சிகளில் பதிவாகியுள்ளது. அதன்பேரில் விசாரணை நடத்தி கொட்டிகெரேயைச் சேர்ந்த மனோஜ் குமார் மற்றும் அவரது மனைவி ஆரத்தி சர்மா ஆகியோரைக் கைது செய்துள்ளனர். அவர்கள் மீது கொலை முயற்சி, குற்றத்திற்கான ஆதாரங்களைக் காணாமல் போதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
