ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவரின் 118 வது ஜெயந்தி விழா மற்றும் 63வது குருபூஜை விழாவில் ஓபிஎஸ், தினகரன் மற்றும் செங்கோட்டையன் ஆகியோர் ஒன்றாக சந்தித்துப் பேசியிருப்பது அரசியல் களத்தில பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Summary
பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவரின் நினைவிடத்தில் ஓபிஎஸ், செங்கோட்டையன், டிடிவி தினகரன், சசிகலா ஆகியோர் சந்திப்பு, அதிமுகவில் அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக இந்த கூட்டணி உருவாகும் சூழல், அதிமுகவுக்கு புதிய சவால்களை உருவாக்கியிருக்கிறது.
ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவரின் 118 வது ஜெயந்தி விழா மற்றும் 63வது குருபூஜை விழாவை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், பொதுமக்களும் மரியாதை செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ் செங்கோட்டையன் இருவரும் இணைந்து ஒரே வாகனத்தில் பயணித்து முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்திற்கு வந்தனர். தொடர்ந்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், ஓ. பன்னீர் செல்வம் மற்றும் செங்கோட்டையன் ஆகியோர் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் ஒன்றாக சந்தித்துப் பேசியிருப்பது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
முன்னதாக, மானாமதுரை ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் ‘வழிவிடு முருகன் கோவில்’ அருகில் காத்திருந்த தொண்டர்களின் வரவேற்பையும் பூரண கும்ப மரியாதையையும் இணைந்து ஏற்றுக்கொண்ட ஓபிஎஸ் செங்கோட்டையன் இருவரும் பின்னர் பசும்பொன் நோக்கி பயணித்தனர். இந்நிலையில், அவர்கள் சென்றடைந்த ஒரு சில வினாடிகளிலேயே அமமுக நிறுவனர் டிடிவி தினகரனும் பசும்பொன்னிற்கு வந்தார். இதையடுத்து, அதிமுக தலைமையின் மீது அதிருப்தியில் இருக்கும் மூவரும் ஒன்றாக சந்தித்துக் கொண்டனர். தொடர்ந்து மூவரும் இணைந்து செய்தியாளர்களையும் சந்தித்துப் பேசினர். அப்போது, நாங்கள் அனைவரும் அம்மாவின் தொண்டர்கள். அம்மாவின் ஆட்சியை மீண்டும் தமிழகத்தில் கொண்துவருவதற்கு ஒன்றாக இணைந்து செயல் படுவோம் எனவும் தெரிவித்தனர்.
இதையடுத்து, டிடிவி. தினகரன் அங்கிருந்து சென்றுவிட்ட நிலையில், செங்கோட்டையனும், ஓபிஎஸ்ஸும் அங்கேயே காத்திருந்தனர். பின்னர் விகே சசிகலா முத்துராமலிங்க தேவருக்கு மரியாதை செலுத்த அங்கு வந்தார். இதையடுத்து, செங்கோட்டையனும், ஓபிஎஸ்ஸும் சசிகலாவை சந்தித்தனர். தினகரன், ஓபிஎஸ், சசிகலாவை மற்றும் செங்கோட்டையன் ஆகியோரின் சந்திப்பு தற்போது அதிமுகவில் பேசுபொருளாகியுள்ளது.

எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம், சசிகலா, டிடிவி தினகரன்
கடந்த செப்டம்பர், மாதத்தில் முன்னாள் செங்கோட்டையன் அதிமுகவை ஒருங்கிணைக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமிக்கு கெடு விதித்திருந்த நிலையில், அதிமுக கட்சிப்பதவிகளில் இருந்து நீக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், செங்கோட்டையனின் கருத்துக்களுக்கு ஓபிஎஸ், டிடிவி தினகரன், சசிகலா உள்ளிட்ட பலரும் ஆதரவு தெரிவித்தனர். முன்னதாகவே, இவர்களின் சந்திப்பு நிகழும் என எதிர்பார்க்கப்பட்டிருந்த நிலையில், தேவர் ஜெயந்தியையொட்டி இன்று இவர்கள் சந்திப்பு நடந்திருப்பது பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.
இதனால் ஓபிஎஸ், செங்கோட்டையன், டிடிவி தினகரன், சசிகலா ஆகிய 4 தரப்பும் ஒன்று சேர்ந்துள்ளதாக பார்க்கப்படுகிறது. ஏற்கனவே தென் மாவட்டங்களில் எடப்பாடி பழனிசாமிக்கு மிகப்பெரிய எதிர்ப்பு இருக்கும் சூழலில், எடப்பாடி பழனிசாமி எதிர்ப்பாளர்கள் அனைவரும் ஒருங்கிணைவது அதிமுகவுக்கு கூடுதல் சிக்கலை ஏற்படுத்தி இருப்பதாக பார்க்கப்படுகிறது.
