சபரிமலை கோயில் தங்கத் திருட்டில் ஈடுபட்டதாகக் கூறப்படும் நபர்களுடன் கேரள தேவசம் அமைச்சர் வி.என்.வாசவனுக்கு தொடர்பு இருப்பதாக பாஜக குற்றம்சாட்டியுள்ளது.
Summary
கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோவில் கருவறையின் வாயிலில், இருபுறமும் உள்ள துவாரபாலகர்கள் சிலைகளில் அணிவிக்கப்பட்டு இருந்த தங்க கவசங்கள், 2019இல் கழற்றப்பட்டு, செப்பனிடுவதற்காக சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இதற்காக, திருவிதாங்கூர் தேவசம் போர்டு கவசங்களை ஒப்படைத்தபோது, அதன் எடை 42.8 கிலோவாக இருந்தது. அதைச் செப்பனிட்டபின், சென்னை நிறுவனம் மீண்டும் ஒப்படைத்தபோது, அதன் எடை 38 கிலோவாக குறைந்திருந்தது. அதாவது தங்கமுலாம் பூசப்பட்ட கவசத்தில் இருந்து 4.54 கிலோ அளவுக்கு தங்கம் மாயமாகி இருந்தது. இந்த விவகாரம், பக்தர்கள் மற்றும் கேரளாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தங்கத்தின் எடை குறைந்ததில் உள்ள முறைகேடுகள் குறித்து முழுமையாக விசாரிக்க, நீதிபதிகள் ராஜா விஜயராகவன்.வி மற்றும் கே.வி.ஜெயக்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு தற்போது சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்து உத்தரவிட்டுள்ளது.

sabarimala
இதற்கிடையே, 2019இல் சபரிமலை கோயிலின் துவாரபாலகர் சிலைகள் மீதான தங்கமுலாம் பூசப்பட்ட தகடுகளை தாமிரத் தகடுகளாக தவறாகப் பதிவு செய்ததாக, அப்போதைய நிர்வாக அதிகாரி பி.முராரி பாபுவை திருவிதாங்கூர் தேவசம் போர்டு இடைநீக்கம் செய்தது. மேலும், உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில் இடைத்தரகராகச் செயல்பட்ட உன்னிகிருஷ்ணன் போத்தி மற்றும் தேவசம்போர்டு துணை ஆணையர் முராரி பாபு, திருவிதாங்கூர் தேவசம் வாரிய செயலர் ஜெயஸ்ரீ, செயல் அதிகாரி சதீஷ், நிர்வாக அதிகாரி ஸ்ரீகுமார், முன்னாள் திருவாபரணம் ஆணையர் கே.எஸ்.பைஜு உள்ளிட்ட 9 அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
தேவசம் போர்டு அதிகாரிகளே இந்த கூட்டுக் கொள்ளையில் ஈடுபட்டு இருப்பது அம்பலமாகியது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கத் தகடுகள் மாயமான வழக்கில், நன்கொடையாளர் உன்னிகிருஷ்ணன் போத்தியும், முராரி பாபுவும் சிறப்பு புலனாய்வுக் குழுவால் கைது செய்யப்பட்டு விசாரணை வளையத்தில் உள்ளனர். இந்த நிலையில், சபரிமலையில் துவார பாலகர்கள் சிலைகளின் தங்கக் கவசத்தில் இருந்த தங்கம் திருடுபோன வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட தங்க பிஸ்கட்டுகளை நீதிமன்றத்தில் கேரள சிறப்புப் புலனாய்வுக் குழுவினர் சமர்ப்பித்துள்ளனர். துவார பாலகர்கள் சிலைகளின் தங்க தகடுகளுக்கான பராமரிப்பு செலவை ஏற்ற உன்னிகிருஷ்ணன் போத்தி கைது செய்யப்பட்ட நிலையில், அவரது பெங்களூரு வீடு மற்றும் பல்லாரியில் உள்ள நகைக்கடையில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. சோதனையில், போத்தியின் வீட்டில் இருந்து 606 கிராம் எடையிலான 4 தங்க பிஸ்கட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்திருந்தனர். குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின்கீழ், அந்த தங்கத்தை, பத்தனம்திட்டா மாவட்டம் ராந்நி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் சிறப்பு புலனாய்வுக் குழு சமர்ப்பித்துள்ளது.

sabarimala
இதற்கிடையே, சபரிமலை கோயில் தங்கத் திருட்டில் ஈடுபட்டதாகக் கூறப்படும் நபர்களுடன் கேரள தேவசம் அமைச்சர் வி.என்.வாசவனுக்கு தொடர்பு இருப்பதாக பாஜக குற்றம்சாட்டியுள்ளது. ”சபரிமலையில் இருந்து 4.5 கிலோ தங்கத்தை கொள்ளையடித்ததற்கு பொறுப்பான சுற்றுச்சூழல் அமைப்புக்கும் அமைச்சர் வாசவனுக்கும் இடையே மிகத் தெளிவான தொடர்புகள் இருப்பதாக அரசாங்க வட்டாரங்களில் இருந்து எங்களுக்குத் தகவல் கிடைத்துள்ளது” என்று மாநில பாஜக தலைவர் ராஜீவ் சந்திரசேகர் இந்தியா டுடேவிற்கு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார். மறுபுறம், சபரிமலை தங்கம் திருட்டு வழக்கில் முராரி பாபுவை சிறப்பு புலனாய்வுக் குழுவின் காவலில் வைக்க மாஜிஸ்ரேட் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், முராரியை திருவனந்தபுரத்திற்கு அழைத்துச் சென்று உன்னிகிருஷ்ணன் போத்தியுடன் விசாரிக்க சிறப்பு விசாரணைக் குழு திட்டமிட்டுள்ளது. இருவரையும் ஒன்றாக விசாரிப்பது மோசடி பற்றிய கூடுதல் விவரங்களை வெளிப்படுத்த உதவும் என்று புலனாய்வாளர்கள் நம்புகின்றனர்.
