பாலிவுட் நடிகர் சல்மான் கானை பாகிஸ்தான் அரசு பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்த்துள்ளதாக இணையத்தில் தொடர்ச்சியாக செய்திகள் வெளிவந்தவாறு உள்ளன.
Summary
சல்மான் கானின் பலுசிஸ்தான் தொடர்பான கருத்துகள் பாகிஸ்தானுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியதாகவும், அவரை பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்த்ததாகவும் தகவல்கள் பரவுகின்றன. ஆனால், பாகிஸ்தான் அரசு இதை உறுதிப்படுத்தவில்லை. பலூச் பிரிவினைவாதத் தலைவர்களின் பாராட்டும், சமூக ஊடகங்களில் பரவும் ஆவணங்களும் இந்த விவகாரத்தை மேலும் சிக்கலாக்குகின்றன.
சவுதி அரேபியா ரியாத்தில் Joy Forum 2025 நிகழ்வு நடைபெற்றது. Joy Forum என்பது உலகம் முழுவதிலும் இருக்கும் தலைமை நிர்வாக அதிகாரிகள், படைப்பாளிகள், தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் கொள்கை வகுப்பாளர்களைக் கொண்டு நடத்தப்படும் இரண்டு நாள் நிகழ்வாகும். விளையாட்டு, கேமிங், திரைப்படங்கள், இசை போன்ற பொழுதுபோக்கு அம்சங்களின் அடுத்தடுத்த உருமாற்றங்கள் உலகளவில் எப்படி இருக்கும் என்பது குறித்தும், அத்துறைகளின் அடுத்தகட்ட வளர்ச்சி குறித்தும் துறைசார் வல்லுநர்களுடன் உரையாடல் நடக்கும்.
இந்நிகழ்வில்தான் சல்மான் கான், ஷாருக் கான், அமீர் கான் போன்ற பாலிவுட்டின் உச்ச நட்சத்திரங்கள் கலந்துகொண்டு மத்திய கிழக்கில் இந்திய சினிமாவின் பிரபலம் குறித்து உரையாடினர்.. ‘மத்திய கிழக்கில் வாழும் தென் ஆசிய சமூகங்களுக்கு இந்திய திரைப்படங்கள் ஏற்படுத்தும் தாக்கம்’ தொடர்பாக பேசிய சல்மான் கான், தற்போது, நீங்கள் ஒரு இந்தி திரைப்படத்தை உருவாக்கி அதை இங்கே (சவுதி அரேபியாவில்) வெளியிட்டால், அது ஒரு சூப்பர்ஹிட்டாக இருக்கும். நீங்கள் ஒரு தமிழ், தெலுங்கு அல்லது மலையாள திரைப்படத்தை எடுத்தால், அது நூற்றுக்கணக்கான கோடி வணிகத்தை ஈட்டும், ஏனெனில் மற்ற நாடுகளிலிருந்து பலர் இங்கு வந்துள்ளனர்” எனத் தெரிவித்தார்.
அதோடு, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், பலுசிஸ்தான் என பல்வேறு இடங்களை சேர்ந்தவர்கள் பணியாற்றுவதாக கூறினார். இதில் பலுசிஸ்தானை தனி நாடாக குறிக்கும் வகையில் சல்மான் கான் பேசியது கலவையான விமர்சனங்களைப் பெற்றது. சிலர் பாராட்டினாலும், சிலர் கடுமையாக விமர்சித்திருந்தனர். அதோடு, பலூச் பிரிவினைவாதத் தலைவர்களும் சல்மான் கருத்தை வரவேற்று பாராட்டினர்.

சல்மான் கான்
இதற்கிடையே, சல்மான்கானின் இந்த கருத்து பாகிஸ்தானுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியதாக செய்திகள். இதனால் சல்மான் கானை பாகிஸ்தான் பலூசிஸ்தான் மாகாண அரசு பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்த்துள்ளது என்ற தகவல்களும் இணையத்தில் உலா வருகின்றன. சமூக ஊடகங்களில் பலர் பாகிஸ்தானின் பாலுசிஸ்தான் அரசு சல்மான் கானை ‘Anti-Terrorism Act (1997)’ன் நான்காம் பட்டியலில் சேர்த்துவிட்டதாகக் கூறி ஒரு ஆவணத்தைக் பகிர்ந்து வருகின்றனர். அதோடு அந்த சட்டம் தொடர்பான விளக்கங்களும் இணையத்தில் பரவுகிறது.
இவையனைத்தும் வதந்திகளே என்றும் செய்திகள் வெளியாகின்றன. ஏனெனில், பாகிஸ்தான் அரசோ அல்லது பாகிஸ்தான் ஊடகங்களோ இதுதொடர்பான எவ்விதமான செய்திகளையும் தெரிவிக்கவில்லை. ஒரு நாட்டின் மத்திய அரசாங்கம்தான் வெளிநாட்டைச் சேர்ந்த ஒருவரை பயங்கரவாதி என அறிவிக்க அதிகாரம் கொண்ட நிலையில், பாகிஸ்தானின் பலூசிஸ்தான் அரசாங்கம் சல்மான் கானை பயங்கரவாதி என அறிவித்திருப்பதாக ஊடகங்களில் பரவும் அறிக்கை தெரிவிக்கிறது.
