ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட லாலு பிரசாத் யாதவின் மூத்த மகன் ”ராஷ்ட்ரிய ஜனதா தளத்திற்கு திரும்புவதை விட சாவதையே தேர்ந்தெடுப்பேன்” என ’பிடிஐ’ க்கு அளித்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
Summary
‘ராஷ்ட்ரிய ஜனதா தளத்திற்கு’ திரும்புவதை விட சாவதையே தேர்ந்தெடுப்பேன்’ என லாலு பிரசாத் யாதவின் மூத்த மகன் தேஜ் பிரதாப் யாதவ் கூறியுள்ளார்.
பிகாரின் முன்னாள் முதல்வர்கள் லாலு பிரசாத் யாதவ் மற்றும் ராப்ரி தேவி ஆகியோரின் மூத்த மகனான தேஜ் பிரதாப், சில மாதங்களுக்கு முன்பு ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். அதன் பிறகு, அவர் ஜனசக்தி ஜனதா தளம் என்ற புதிய கட்சியைத் தொடங்கினார். நடைபெற இருக்கும் பிகார் சட்டமன்றத் தேர்தலில், மஹுவா தொகுதியில் இருந்து தேஜ் பிரதாப் யாதவ் போட்டியிடுகிறார்.
மறுமுனையில், ராஷ்டிரிய ஜனதா தளம் தலைமை வகிக்கும் மகாகத்பந்தன் கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக தேஜஸ்வி யாதவ் அறிவிக்கப்பட்டிருக்கிறார். இவர் ஆர்ஜேடியின் கோட்டையாகக் கருதப்படும் ரோகோபூர் தொகுதியில் இருந்து போட்டியிடுகிறார்.

தேஜ் பிரதாப் யாதவ்
இந்நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்த தேஜ் பிரதாப் யாதவிடம், மீண்டும் ஆர்ஜேடி-க்கு திரும்புவதற்கு வாய்ப்புள்ளதா என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர், ‘ராஷ்ட்ரிய ஜனதா தளத்திற்கு’ திரும்புவதை விட சாவதையே தேர்ந்தெடுப்பேன். எனக்கு அதிகாரப் பசி இல்லை. கொள்கைகளும் சுயமரியாதையும் எனக்கு மிக உயர்ந்தவை,” என்றும் அவர் கூறியுள்ளார்.
தொடர்ந்து, மகாகத்பந்தனின் முதலமைச்சர் வேட்பாளராக தனது தம்பி தேஜஸ்வி யாதவ் அறிவிக்கப்பட்டது குறித்துப் பேசிய அவர், “முடிவுகளை வேண்டுமானால் அரசியல்வாதிகள் எடுக்கலாம், ஆனால், அதிகாரத்தில் அமர மக்களின் ஆசிர்வாதம் தேவை” என்றும் பேசியுள்ளார்.
