
உலகம் முழுவதுமே செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்கள் பல்வேறு துறைகளிலும் ஆக்கிரமிப்பு செய்ய தொடங்கி விட்டன. ஐடி வேலைகள் , வைட் காலர் வேலைகள் மட்டுமில்லாமல் மருத்துவம் சார்ந்த துறைகளிலும் கூட ஏஐ கருவிகள் பயன்பாடு அதிகரித்து வருகிறது.
மருத்துவர் , செவிலியர் பணிகளை முழுமையாக ஏஐ கருவிகளால் எடுத்துக் கொள்ள முடியாது என்றாலும் அவர்களுக்கு ஒரு உதவியாளராக இவை மாறி வருகின்றன. உலகம் முழுவதும் இந்த மாற்றம் படிப்படியாக ஏற்றுக் கொள்ளப்பட்டு வருகிறது. இந்த சூழலில் தான் சாட் ஜிபிடி உரிமையாளரான ஓபன் ஏஐ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சாம் ஆல்ட்மேன் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மனிதர்கள் பல ஆண்டுகளாக எதிர்கொண்டிருக்கும் மிகப் பெரிய சவாலான புற்றுநோயை தீர்ப்பதற்கு உதவும் என நம்பிக்கை தெரிவித்து இருக்கிறார் .
இது தொடர்பாக தன்னுடைய பிளாகில் விரிவாக எழுதியிருக்கும் சாம் ஆல்ட்மேன் மருத்துவத்துறையில் ஏஐ தொழில்நுட்பம் மிகப்பெரிய விஷயங்களை எல்லாம் செய்யப் போகிறது என குறிப்பிட்டு இருக்கிறார். குறிப்பாக நவீன புற்றுநோய் சிகிச்சை போன்ற பல முன்னெடுப்புகளை நாம் பார்க்கப் போகிறோம் என சுட்டிக்காட்டி இருக்கிறார். தற்போது செல்லக்கூடிய இதே பாதையில் ஏஐ வளர்ச்சி இருந்தால் நிச்சயம் ஒரு நாள் புற்றுநோயை சரி செய்வதற்கான மருந்தினை கண்டுபிடிப்பதற்கு அது மிகப்பெரிய ஒரு உதவியை உதவியாக இருக்கும் என கூறி இருக்கிறார்.
இதற்காக 10 கிகாவாட் சேலஞ்ச் என்ற ஒரு புதிய சவாலை அவர் அறிவித்திருக்கிறார் . இதன்படி ஒவ்வொரு வாரமும் ஒரு கிலோவாட் ஏஐ திறனை சேர்க்கக் கூடிய வகையில் ஏஐ சம்பந்தப்பட்ட உள் கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும் என குறிப்பிட்டு இருக்கிறார். இது சாத்தியமானால் புற்றுநோய் சிகிச்சைக்கான மருந்தும் சாத்தியமாகும் என தெரிவித்து இருக்கிறார்.
கேன்சர் சிகிச்சைக்கு இதுவரை உலகம் முழுவதுமே மருந்து கண்டுபிடிப்பதற்கான ஆய்வுகள் பெருமளவில் முடுக்கிடப்பட்டிருந்தாலும் பெரிய அளவிலான கண்டுபிடிப்புகள் இதுவரை நிகழ்த்தப்படவில்லை. இந்த சூழலில் தான் கூகுளின் டீப் மைண்ட் முன்கூட்டியே புற்றுநோயை கண்டறிவது மற்றும் புற்றுநோய் சிகிச்சைக்கான மருந்தை கண்டறிவது தொடர்பான ஆய்வுகளை மிக வேகமாக நடத்தி வருகிறது .
அதாவது மருத்துவ ஆய்வுகளில் இருக்கும் தரவுகளை ஒருங்கிணைத்து பகுப்பாய்வு செய்து முடிவுகளை வழங்கும் திறன் ஏஐ கருவிகளிடம் அதிகமாக இருப்பதே இந்த மருத்துவ துறையில் ஏஐ கருவிகளால் மிகப்பெரிய மாற்றங்களை கொண்டுவர முடியும் என இவர்கள் நம்பிக்கையோடு கூறுவதற்கு முக்கிய காரணமாகும். மருந்து ஆய்வில் ஏஐ கருவிகள் சிறப்பாக செயல்பட்டால் அது மனித குலத்திற்கே பெரிய உதவியாக அமையும். குறிப்பாக புற்றுநோய் பாதிப்பும் அதனால் ஏற்படும் மரணமும் அதிகரித்துள்ள இந்த கால கட்டத்தில் இது முக்கியமானதாக இருக்கிறது.